தமிழர்களின் கோரிக்கை ஆவணத்தை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடமும் கையளிக்க தீர்மானம்

480

தமிழ் மக்களின் அபிலாஷைகள் மையப்படுத்திய கோரிக்கை ஆவணமொன்றை புதிய இடைக்கால அரசாங்கத்திடமும்,காலிமுகத்திடல் போராட்டக்காரர்களிடத்திலும் கையளிப்பதற்கு ஆறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து தீர்மானித்துள்ளன.

குறித்த கோரிக்கை ஆணவனத்தின் இறுதி வரைவானது இறுதி செய்யப்படவுள்ளதோடு, இந்த செயற்பாட்டில் தமிழ் மக்களின் நலன்சார்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியையும் கலந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு கட்சிகளின் தலைவர்களான, நீதியரசர் விக்னேஸ்வரன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர்  மெய்நிகர் வழியில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

இதில் புளொட் தலைவர் சித்தார்த்தன் பயணம் காரணமாக ,  பங்கேற்றிருக்கவில்லை. எனினும் குறித்த தீர்மானத்திற்கு அவர் தரப்பிலும் ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக, குறித்த கட்சிகளை ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டவரும், ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளருமான சுரேந்திரன் விடுத்துள்ள ஊடக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ள ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றிய இறுதி நிலைப்பாடு தொடர்பில் இணைய வழியில் உரையாடினர்.

கடந்த இரு வாரங்களாக தொடர்ச்சியாக தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலை, தமிழ் மக்கள் நிலைப்பாடு , இதை எப்படிக் கையாள்வது என்பது குறித்து இணையவழியினூடாக பல சந்திப்புகள் நடைபெற்றன.

நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி வேட்பாளர்கள், வரப்போகும் அரச தரப்பு, போராட்ட அமைப்புகள் ஆகியோரிடம் தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதாக தீர்மானிக்கப் பட்டது. அக்கோரிக்கைள் சம்பந்தமான தயாரிக்கப்பட்ட வரைபும் பரிசீலிக்கப் பட்டது.

இன்று காலை 11 மணிக்கு மீண்டும் கூடி இக்கோரிக்கை ஆவணத்தை இறுதி செய்வது எனத்தீர்மானிக்கப்பட்டது. இதற்கான சர்வதேச ஆதரவை ஒருங்கமைக்கவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் தமது எதிர்கால அரசியல் இருப்பை தீர்மானிக்க மீண்டும் கிடைத்துள்ள இச்சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு ஒருமித்த நிலையில் கையாள்வதானது எமது மக்களுக்கான உறுதியான முக்கிய மாற்றங்களை ஏற்படுத்த வழி அமைக்கும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் எமது மக்கள் நலன் கருதி தமிழ் தேசிய மக்கள் முன்னணியிடமும் இம்முயற்சியில் இணைந்து கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டது என்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here