ஜனாதிபதி செயலகத்திற்குள் அனுமதியின்றியிருந்த 9 பேர் கைது ; இருவர் வைத்தியசாலையில் அனுமதி

444

ஜனாதிபதி செயலகத்திற்குள் அனுமதியின்றி தங்கியிருந்த சந்தேகநபர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பொலிஸாரினால் முப்படையினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பின் மூலம் , கோட்டை பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் அதன் பிரதான நுழைவாயில் மற்றும் அலுவலகத்திற்குள் தங்கியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் போது 9 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் சிறு காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் களனி, எம்பிலிபிட்டி, ஜாஎல, இரத்தினபுரி, செவனகல, வெல்லம்பிட்டி, பிடகல, வாத்துவ மற்றும் நுகேகொடை பிரதேசங்களைச் சேர்ந்த 26 – 58 வயதுகளுக்கு இடைப்பட்டவர்களாவர்.

கோட்டை பொலிஸாரினால் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி செயலக சோதனை நடவடிக்கைகளுக்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கை ரேகை பரிசோதனைப் பிரிவினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பு மத்தி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதோடு , அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here