ஜனாதிபதி – சுதந்திரக் கட்சிக்கு இடையே இன்று விசேட கலந்துரையாடல்!

904

சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் யாரும், அவசரகால சட்டம் தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பின்போது வாக்களிக்கவில்லை.

அரசாங்கம் எம்மிடம் கடந்த காலங்களில் கூறிய விடயங்களை செயற்படுத்தாத காரணத்தினால்தான், நாம் நேற்றைய வாக்கெடுப்பிலும் கலந்து கொள்ளவில்லை.

விசேடமாக சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாடு இன்னமும் ஸ்தீரமாக வெளிப்படுத்தப்படவில்லை.

சர்வக்கட்சி அரசாங்கத்தில் நாம் இணைய வேண்டுமானால், 6 மாதத்திற்குள் ஒரு தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

அதற்குள் எரிபொருள் உள்ளிட்ட பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளோம்.

எனினும், நாடாளுமன்றில் ஒருசிலர் நடந்துக் கொள்வதைப் பார்க்கையில் அவர்கள் எந்தப் பக்கம் உள்ளார்கள் என்பதையே புரிந்துக் கொள்ள முடியாமல் உள்ளது.

போராட்டக்காரர்களை அடக்க இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு சர்வதேச நாடுகளும் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தின் இவ்வாறான செயற்பாடுகள், போராட்டங்களை இன்னமும் தீவிரப்படுத்துமே ஒழிய அதனை ஒருபோதும் கட்டுப்படுத்தாது. நாடும் இதனால் மேலும் பாதிக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இதுதொடர்பாக சிந்திக்க வேண்டும். சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பாக நாம் இன்று மதியம் ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தவுள்ளோம்.

உலக நாடுகளில் இவ்வாறான பொருளாதாரப் பிரச்சினைகள் வந்தபோதும், சர்வக்கட்சி அரசாங்கங்கள் அமைந்த வரலாறுகள் உள்ளன.

இந்தநிலையில், இன்றைய பேச்சுவார்த்தையின்போதும் நாம் எமது நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் தெரியப்படுத்தவுள்ளோம்.

எமது கோரிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி எவ்வாறான நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறாரோ, அதற்கு இணங்க தான் எமது அடுத்தக்கட்ட நகர்வுகளும் இருக்கும்.

நாட்டில் இப்போதிருக்கும் இந்தப் பிரச்சினைகள் அனைத்துக்கும் சர்வக்கட்சி அரசாங்கத்தினாலேயே தீர்வினை காண முடியும் என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம் என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here