கொவிட் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கைக்கு அமைய, நாட்டில் கொவிட் பரவலின் தன்மையை மதிப்பிட முடியாது என சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
கொரோனா நோய் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்கள் மற்றும் கொவிட் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களுக்கு மேற்கொள்ளப்படும் கொவிட் பரிசோதனைகளை மட்டுப்படுத்தி சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் அறிக்கையொன்று வெளியிடப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கமைய, நாளாந்தம் வெளியிடப்படும் அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகளவான கொவிட் தொற்றாளர்கள் காணப்படலாம் எனவும் நாளாந்த அறிக்கைக்கு அமைய, கொவிட் பரவலின் தன்மையை மதிப்பிட முடியாது எனவும் பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.