அமைதிவழி போராளிகள் உள்ளே – வன்முறையின் தந்தை மஹிந்த வெளியே – சஜித்

576

அமைதியாகவும், நாகரீகமாகவும் போராட்டம் மேற்கொண்ட ஜோசப் ஸ்டாலின் போன்ற தொழிற்சங்கத் தலைவர்களை கைது செய்தமைக்கும், தற்போதைய வன்முறை சார் அடக்குமுறையின் முன்னோடியான மஹிந்த ராஜபக்ஷ இன்னமும் சுதந்திரமாக வெளியே நடமாடுவதற்குமான காரணம் என்னவென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள தொழிற்சங்க தலைவர் ஜோசப் ஸ்டாலினை பார்வையிடுவதற்காக இன்று கொழும்பு கோட்டை காவல்நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த அவர் உழைக்கும் மக்களுக்காகவும், ஆசிரியர் சமூகத்திற்காகவும் போராடிய ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள போது, வன்முறையின் தந்தையான மஹிந்த ராஜபக்ஷ சுதந்திரமாக பொழுதை கடத்திக்கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்தார்.

மனிதநேயத்தின் பெயரால் நாடு குறித்து சிந்தித்து ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டிய தருணத்தில், எதேச்சதிகாரமாக அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடுவதை தான் வன்மையாக கண்டிப்பதாகவும், இந்த அரச பயங்கரவாதத்தை உடனடியாக நிறுத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது ஜோசப் ஸ்டாலின் தொடர்பில் கூறியிருந்ததை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், அன்று அவர் கைது செய்யப்பட்ட போது ஜீ.எஸ்.பி வரிச்சலுகையை இழக்க நேரிடும் என்று கூறியிருந்தால், இன்று அது அவ்வாறு இழக்கப்படாதா? எனவும் கேள்வி எழுப்பினார்.

வெடிகுண்டுகள், வாள்கள், துப்பாக்கி ரவைகள் போன்றவற்றால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், கலந்துரையாடல் மற்றும் இணக்கப்பாட்டின் மூலம் தீர்க்க வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தற்போது வரை தொடரும் வன்முறைச் சுழற்சியை ஆரம்பித்தது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே எனவும் தெரிவித்தார்.

எந்தவொரு குடிமகனும் தான் கருதும் கருத்தைக் கொண்டிருப்பதற்கும், அதற்காக முன் நிற்கவும், பேசவும், ஒன்று கூடவும், அமைதியான முறையில் போராட்டம் நடத்தவும் உரிமையுண்டு.

வன்முறையற்ற அகிம்சை வழியில் போராடும் உரிமையை யாராலும் மீற முடியாது.

ஜோசப் ஸ்டாலின் தனக்குள்ள உரிமைகளை நாட்டுக்காக ஜனநாயக முறையில் பயன்படுத்தினார் எனவும், அந்த உரிமையை எவராலும் எதிர்க்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here