கடவுச்சீட்டை வழங்காவிட்டால் எனது கைக்குவிலங்கிடப்போவதாக தெரிவித்தனர் – ஸ்கொட்லாந்து பெண்

1047

இலங்கையில் வசித்துவரும் – நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை பதிவு செய்த ஸ்கொட்லாந்து பெண்ணொருவரின் கடவுச்சீட்டினை  அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

சென் அன்ரூசினை சேர்ந்த கேய்லைட் பிரேசர் தான் விசா நிபந்தனைகளை  மீறிவிட்டதாக தெரிவித்து ஆறு அதிகாரிகள் தான் தங்கியிருந்த பகுதிக்கு வந்தனர் என தெரிவித்துள்ளார்.

அவர்கள் நான் எனது கடவுச்சீட்டை ஒப்படைக்கவேண்டுமென் கோரினார்கள் அல்லது என்னை கைதுசெய்யப்போவதாக குறிப்பிட்டார்கள் என 34 வயது பிரேசர் குறிப்பிட்டார்.

ஏழுநாள் தன்னை விசாரணைகளிற்காக காத்திருக்குமாறும் அதன் பின்னரே ஆவணங்களை ஒப்படைக்கமுடியும் என அவர்கள் தெரிவித்தனர் என பிரேசர் குறிப்பிட்டார்.

அதற்கு முதல் நாள் அவருக்கு பதற்றத்துடன் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது,அவருக்கு விசா வழங்கிய நிறுவனத்தின் ஊழியரே அவரை அழைத்திருந்தார், பிரேசர் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதால் அவரை உடனடியாக நாட்டிலிருந்து வெளியேறுமாறு  அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

கொழும்பில் தொடரும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து பிரேசர் சமூகஊடகங்களில் கருத்துக்களை பதிவு செய்துவந்துள்ளார்,ரணில் விக்கிரமசிங்க 21ம் திகதி ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் ஆர்ப்பாட்டங்களை அச்சுறுத்தல் கண்காணிப்பு ஆர்ப்பாட்டங்காரர்களை சிவில் சமூகத்தினரை சட்டத்தரணிகள் பத்திரிகையாளர்களை தன்னிச்சையாக கைதுசெய்தல் போன்றவை காணப்படுவதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் குடிவரவு துறை அதிகாரிகளுடனான மோதல் குறித்து பீஏசெய்தி முகவர் அமைப்பிற்கு கருத்து தெரிவித்த பிரேசர் அவர்கள் வீதியில் வைத்து என்னுடன் பேசினார்கள் எனது வீட்டிற்கு வெளியே நாற்பது நிமிடங்கள் நின்றார்கள் ஆனால் அவர்களால் நான் என்ன செய்தேன் என்பதை தெரிவிக்க முடியவில்லை என தெரிவித்தார்.

நான் எனது விசா நிபந்தனைகளை மீறிவிட்டேன் அவர்கள் மீண்டும் மீண்டும் தெரிவித்தார்கள்,ஆனால் நான் எந்த விசாவில் தங்கியிருக்கின்றேன் என்பதை எனது விசாவை பார்க்கும் வரை அவர்களால் தெரிவிக்க முடியவில்லை, எனவும் அவர் தெரிவித்தார்.

நான் பாதுகாப்பாக உணரவில்லை,எனவும் அவர் தெரிவித்தார்.

அதிகாரிகளில் இருவர் தனது கடவுசீட்டை பெறுவதற்காக வீட்டிற்குள் நுழைய முயன்றதை தொடர்ந்து அவர்களுடனான உரையாடல்களை அவர் பதிவுசெய்திருந்தார்.

இலங்கையின் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பணவீக்கம் எரிபொருள்நெருக்கடிகள் குறித்து கவனத்தை ஈர்த்தமைக்காக தான் துன்புறுத்தப்படுவதாக கருதுவதாக அவர் அந்த வீடியோவில் தெரிவிக்கின்றார்.

அவர் சமூக ஊடகங்களில் பதிவிட்டதை தொடர்ந்து அவரின் சட்டத்தரணியான வின்விடா பவுண்டேசனின் பொதுச்செயலாளர் நாகநந்த கொடித்துவக்கு அவருக்கு உதவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

கடவுச்சீட்டை பெறுவதற்காக திங்கட்கிழமை குடிவரவு அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பிரேசர் 2019 இல் இலங்கைக்கு சென்றிருந்தார்,கொரோனாவைரஸ் முடக்கல் நிலையின் போது ஜேர்மனியில் தங்கியிருந்த அவர் கடந்த வருடம் மருத்துவ விசாவில் இலங்கை வந்தார்.

கடந்தமாதம் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் ரணில்விக்கிரமசிங்க அவசரகாலச்சட்டத்தை அறிவித்தார்.பொதுமக்கள் பாதுகாப்பினை கருத்தில்கொண்டே இந்த நடவடிக்கை என அவர் மீண்டும் மீண்டும் தெரிவித்தார்.

அவசரகால நிலை படையினர் சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கும் தடுத்துவைப்பதற்கும எந்தவொரு நிலைமையையும் சமாளிப்பதற்காக தற்போதுள்ள சட்டங்களை மீறி  புதிய விதிமுறைகளை உருவாக்குவதற்கும்  அனுமதியளிக்கின்றது.

கடந்த இரண்டு வாரங்களில்40 முதல் 50 பேர் வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என கருதுவதாக பிரேசர் தெரிவிக்கின்றார்,நேற்று மாத்திரம் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் எனக்கு கைவிலங்கிடப்போவதாக மிரட்டியவேளை அது மிகவும் பயங்கரமானதாக இருந்தது ஏனெனில் அவசரகாலச்சட்டத்தின் கீழ் அவர்களால் எதனையும் செய்ய முடியும் என பிரேசர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டங்கள் குறித்து தனது குரலை தொடர்ந்து ஒலிக்கச்செய்யும் பிரேசர் இந்த மக்களிற்கு என்ன நடக்கின்றது என்பது பயங்கரமானது, மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை,அமைதியான செயற்பாட்டாளர்கள் மீது அரசாங்கம் கண்ணீர் புகையை பயன்படுத்துகின்றது, என அவர் தெரிவித்தார்.

என்ன நடக்கின்றது என்பதை வெளிப்படுத்துவதற்கு இங்குள்ள மக்கள் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு சமூக ஊடகங்கள்  மிகவும் முக்கியமானவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரேசரின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை  மூலம் எடுத்துள்ளதாக அபேர்டீனை சேர்ந்த தொழிற்கட்சியின் ஊள்ளுராட்சி உறுப்பினர் டீனா திசேர தெரிவித்தார்.

அவரின் உயிருக்கு ஆபத்து என்பதால் கேய்லேயை இலங்கையிலிருந்து வெளியேறுமாறு தொலைபேசி அழைப்புகள் வந்தன என அவர் குறிப்பிட்டார்.

அவர்கள் ஆர்ப்பாட்டங்கள் அவரசரகால நிலை மனித உரிமைகள் குறித்து கவனத்தை ஈர்த்த சமூக ஊடக செயற்பாட்டாளர்,காரணமின்றி அவரது கடவுச்சீட்டை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

ஸ்கொட்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர்  பிரேசரின் கடவுச்சீட்டை மீளப்பெறுவதற்கும் அவர் பிரிட்டன்திரும்பும்வரை அவரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும்  என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன  என கேள்வி எழுப்பும் கடிதமொன்றை இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இலங்கையி;ல் உள்ள பிரிட்டனை சேர்ந்த பெண்ணிற்கு எங்கள் பணியாளர்கள் உதவுகின்றனர் என பிரிட்டிஸ் தூதரகம் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here