கப்பல் விபத்துகள் தொடர்பான செயற்பாடுகளை கையாள புதிய விதிகள்!

384

கப்பல் விபத்துக்களை கையாள்வதற்கான தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் புதிய சட்டங்களை உருவாக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு இன்று பணிப்புரை வழங்கினார்.

சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதி அமைச்சின் அனுசரணையுடன் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் எரிந்து மூழ்கியதன் காரணமாக நாட்டின் கரையோரப் பகுதிகள் மற்றும் கடலோரப் பகுதிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான இழப்பீடுகளை உடனடியாகப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

பத்தரமுல்லை, செத்சிறிபாவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது, ​​கப்பலில் இருந்து வெளியாகும் 1600 மெற்றிக் தொன் பிளாஸ்டிக் மணிகள் மற்றும் இரசாயனப் பதார்த்தங்கள் பமுனுகம பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட களஞ்சியசாலைகளில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதுடன், சட்ட ஆலோசனையின் அடிப்படையில் அவை தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ய கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி திருமதி தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்

சிங்கப்பூர் கொடியின் கீழ் பொருட்களை ஏற்றிச் சென்ற எம்.வி. எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கொள்கலன் கப்பல், கடந்த வருடம் ஜூன் மாதம் 02 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தில் இருந்து 9 கடல் மைல் தொலைவில் தீப்பிடித்து மூழ்கியது.

கப்பலில் சேமித்து வைக்கப்பட்டிருந்த நைட்ரிக் அமிலத்தால் தீ விபத்து ஏற்பட்டது, மேலும் கப்பல் மூழ்குவதற்கு முன் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக அதன் 1486 கொள்கலன்களில் சில கடலில் விழுந்தன. மன்னார் தொடக்கம் ஹம்பாந்தோட்டை கிரிந்த வரையான 746 கிலோமீற்றர் கடற்பரப்பு கடல் நீரில் கலந்துள்ள இந்த கொள்கலன்களில் இருந்த இரசாயனங்கள் மற்றும் பிளாஸ்டிக் மணிகளால் முற்றாக மாசடைந்துள்ளது.

நீர்கொழும்பு குளத்தை சூழவுள்ள பகுதிகள், நீர்கொழும்பு கரையோரம் மற்றும் பமுனுகம சக்குகந்த கடற்கரை பகுதிகளுக்கே அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.

எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ல் என்ற கப்பலின் கழிவுகளால் மாசுபட்ட கடற்கரையை சுத்தம் செய்யும் பணி கடந்த ஆண்டு மே மாதம் 20ம் திகதி முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது 2723 இடங்களில் 746 கி.மீ. தூரத்திற்கு துப்பரவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிகழ்வில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன செயல்முறைகள் பீடத்தின் பேராசிரியர் அஜித் டி அல்விஸ், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வனவியல் மற்றும் சுற்றாடல் விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் பிரசாந்தி குணவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here