தம்மிக்க பெரேராவிற்கு எதிரான மனுக்கள் பரிசீலனை

476

வர்த்தகர் தம்மிக்க பெரேராவை பாராளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட நான்கு அடிப்படை உரிமை மனுக்களை  எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

பிரியந்த ஜயவர்தன, யசந்த கோதாகொட மற்றும் அர்ஜூன ஒபேசேகர ஆகிய நீதியரசர்களினால் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின்  நிறைவேற்றுக் குழு உறுப்பினர், துமிந்த நாகமுவ, சி.பி.சிவந்தி பெரேரா, பி.எஸ்.குரே, பேராசிரியர் ஹரேந்திர சில்வா, மினோலி டி அல்மேதா, விசாகா பெரேரா, திலகரத்ன மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ரத்னஜீவன் ஹூல் உள்ளிட்ட சிலர்   இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள், K.A.D.தம்மிக்க பெரேரா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர்  சாகர காரியவசம் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தம்மிக்க பெரேராவின் நியமனம் சட்டவிரோதமானது என தெரிவிக்கும் மனுதாரர்கள், பாராளுமன்ற  தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பாளர்கள்  பட்டியலிலும் பெயரிடப்பட்ட தேசியப்பட்டியலிலும் தம்மிக்க பெரேராவின் பெயர் குறிப்பிடப்படவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேர்தல் சட்டத்தின் பிரகாரம்,  பட்டியல்களுக்கு அப்பாற்பட்ட ஒருவரை தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள மனுதாரர்கள், தனி நபரின் விருப்பத்திற்கேற்ப தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரை  தீர்மானிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

அரசியலமைப்பின் 12 ஆம் சரத்தின் முதலாவது பிரிவின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படை உரிமையை இந்த நியமனம்  மீறுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எனவே, இந்த நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்கி உத்தரவிடுமாறு அவர்கள் நீதிமன்றத்தில் கோரியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here