இலங்கையில் தினமும் 10 மணித்தியால மின்துண்டிப்பு!

2666

இலங்கையில் தினமும் பத்து மணித்தியாலங்கள் கண்டிப்பாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் நுரைச்சோலை நிலக்கரி ஆலையில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்வதற்கு தேவையான 960,000 மெற்றிக் தொன் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படும்.

அதனால் தினமும் பத்து மணித்தியாலங்கள் கண்டிப்பாக மின்சாரத்தை துண்டிக்க நேரிடும். ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் 38 கப்பல்களில் நிலக்கரியை இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.

இருந்த போதிலும் 14 கப்பல்களுக்கான கடன் கடிதங்களை வழங்க முடியாமல் போனதுடன், கோரப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான விலைகளை நிறுவனங்கள் சமர்ப்பிக்கவில்லை.

எவ்வாறாயினும், கடந்த எட்டு மாதங்களில் 24 நிலக்கரி ஏற்றுமதிகளை வெற்றிகரமாக மேற்கொண்டதன் மூலம் நுரைச்சோலை நிலக்கரி ஆலை சாதாரணமாக மின்சாரத்தை உற்பத்தி செய்தது.

ஆனால் கடந்த ஏப்ரலில் இருந்து மேற்கு கடற்கரை தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதால், ஏப்ரல் முதல் எதிர்வரும் அக்டோபர் வரை நாட்டுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டாலும் அதனை, தரையிறக்க முடியவில்லை.

இதனால் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் நிலக்கரி இருப்பு இல்லாத காரணத்தினால் நுரைச்சோலை நிலக்கரி ஆலை தானாகவே செயலிழக்கும்.

தேசிய மின்சார அமைப்பில் கிட்டத்தட்ட 900 மெகாவாட் மின்சாரத்தை சேர்க்கும் இந்த மின் உற்பத்தி நிலையம் நிறுத்தப்பட்டால், ஒரு நாளைக்கு சுமார் பத்து மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here