கடன் மறுசீரமைப்பு – இந்தியா சீனாவுடன் சர்வதேச நிறுவனம் பேச்சுவார்த்தை

402

இலங்கையின் கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நிதி ஆலோசனைக் குழுவான லசார்ட் (Lazard) பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக, அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, கடன் நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடியுள்ளது.

அரசாங்கத்தின் சுமார் 85 பில்லியன் டொலர் முதல் 100 பில்லியன் டொலர் வரையான கடன் மறுசீரமைக்கும் செயல்முறையின் மூலம் அரசாங்கத்திற்கு வழிகாட்ட, சர்வதேச சட்டத்தரணிகளான கிளிஃபர்ட் சான்ஸுடன் இணைந்து லசார்ட் ஆலோசனைக்குழு கடந்த மே மாதம் பணியமர்த்தப்பட்டது.

இந்த மாத தொடக்கத்தில், சுமார் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்காக இலங்கையுடன் இணக்கம் கண்டதாக சர்வதேச நாணய நிதியம் கூறியது.

எனினும், இந்த கடன் திட்டத்தை செயற்படுத்த, இலங்கையின் மூன்று முக்கிய சர்வதேச கடன் கொடுநர்களான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளிடம் இருந்து கடன் நிவாரணம் தேவைப்படும்.

இதற்காக லசார்ட் ஆலோசனை குழு இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் பேசும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனூடாக நாங்கள் ஒரு உடன்படிக்கைக்கு வர முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையின் கடனில் சுமார் 13 பில்லியன் டொலர்களை மூன்று நாடுகளும் வழங்கியுள்ள அதேவேளை, இலங்கையின் மிகப்பெரிய இருதரப்புக் கடன் வழங்குனராக சீனா உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here