மைத்திரியின் பெஜட் வீதி வீடு : உயர் நீதிமன்ற விசாரணை நிறைவு

524

 

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக  இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய  கொழும்பு, பெஜட் வீதியில் அமைந்துள்ள  வீட்டை,  ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்தும் அவருக்கு சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில்  அமைச்சரவை ஊடாக முன்னெடுக்கப்பட்ட தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்திய மனு மீதான விசாரணைகளை உயர் நீதிமன்றம் நேற்று (14) நிறைவு செய்தது.  அதன்படி, குறித்த மனு தொடர்பிலான தீர்ப்பு திகதி அறிவிப்பு இன்றி ஒத்தி வைக்கப்பட்டது.

நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தலைமையிலான காமினி அமரசேகர,  குமுதினி விக்ரமசிங்க  ஆகிய நீதியரசர்களை உள்ளடக்கிய  நீதியரசர்கள் இது தொடர்பிலான  உத்தரவைப் பிறப்பித்தது.

பெஜட் வீதியில் அமைந்துள்ள  வீட்டை,  ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்தும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு  சொந்தமாக்கிக்கொள்ளும் வகையில்  அமைச்சரவை ஊடாக முன்னெடுக்கப்பட்ட தீர்மானம்  அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக  தீர்ப்பளிக்குமாறு கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர்  பாக்கியசோதி சரவணமுத்துவினால் இந்த அடிப்படை உரிமை மீறல் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மனுவின் பிரதிவாதிகளாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பெயரிடப்ப்ட்டுள்ளனர்.

மனுவில் மனுதாரருக்காக மன்றில்  சட்டத்தரணி சுரேன் பெர்ணான்டோ ஆஜராகிறார்.

‘மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக  இருந்த காலப்பகுதியில், அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலமாக பயன்படுத்திய  கொழும்பு , பெஜட் வீதியில் அமைந்துள்ள  வீட்டை,  ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொடர்ந்தும்  பயன்படுத்துவதற்காக அவருக்கே கையளிக்க  அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக  கடந்த 2019 ஒக்டோபர் 16 ஆம் திகதி  பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

இந்த வீடு 180 மில்லியன் ரூபா செலவில்  நவீனமயப்படுத்தப்பட்ட வீடாகும்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையின் பிரதானியாக இருந்த ஒரு கூட்டத்திலேயே இதற்கான தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.  மிகப் பெரும் வணிகபெறுமதியைக் கொண்ட  பொது மக்களுக்கு சொந்தமான ஒரு சொத்தை, தான் பிரதானியாக  இருக்கும் அமைச்சரவை ஊடாக தனக்கு சொந்தமாக்கிக்கொள்ள  முன்னாள் ஜனாதிபதி எடுத்த நடவடிக்கை நியாயமற்றது.

இது 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைகள் சட்டத்துக்கும் முரணானது.

இந் நடவடிக்கை ஊடாக முன்னாள் ஜனாதிபதி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். மக்கள் அவர் மீது வைத்த நம்பிக்கையை  தகர்த்தெறிந்துள்ளார்.

அதனால் அந்த வீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அளிக்க அமைச்சரவை எடுத்த தீர்மானம் ஊடாக  அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளன என உத்தரவிடவும்.’ என மனுதாரர் மனுவூடாக கோரியுள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளில் ஒருவராக பெயரிடப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில்  ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா  ஆஜரான  நிலையில்  சட்ட மா அதிபர் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் நரின் புள்ளே ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here