விவசாயிகளுக்கு யூரியா பசளை விநியோகிக்கப்படவுள்ளது

845

ஒரு ஏக்கருக்கும் குறைந்த பரப்பிலான வயல் காணியில் பயிர் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் நிறைக் கொண்ட யூரியா பசளை விநியோகிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி 3 லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு தேவையான யூரியா பசளை இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சகல விவசாயிகளுக்கும் அவசியமான டி.எஸ்.பி பசளையை இலவசமாக வழங்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சத்திடும் நிகழ்வு நேற்று விவசாய அமைச்சில் இடம்பெற்றது.

அந்த ஒப்பந்தத்திற்கு அமைய இந்த முறை பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உள்ளிட்ட பசளை வழங்குவதற்காக 55 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்க இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட அரிசி மனித உடலுக்கு உகந்தது அல்லவென்றும் அதனை விலங்கு தீவனத்திற்காக மாத்திரம் பயன்படுத்துமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர வெளியிட்ட கருத்து மூலம் இராஜதந்திர ரீதியான பிரச்சினை ஏற்படக் கூடும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ வெளியிட்ட கருத்துக்கு அமைச்சர் பதில் வழங்கியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசியை உட்கொள்ள வேண்டாம் என்ற எந்தவித அறிவிப்பையும் தாம் வெளியிடவில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தரமான அரிசி உற்பத்தி இடம்பெற்றுள்ளதன் காரணமாக வெளிநாட்டு அரிசியை உட்கொள்வதை தவிர்த்து உள்ளூர் அரிசியை பயன்படுத்துமாறு கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் எமது நாட்டில் தரமான அரிசி, மிளகாய், மரக்கறி மற்றும் பழங்கள் உற்பத்தி செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here