அல்குர்ஆன், முஹம்மது நபியை அவமதிக்கும் கருத்து : நாமல் குமார குறித்து சி.சி.டி. விசாரணை

1473

அல் குர் ஆனையும்,  இறை தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும்  அவமதிக்கும் வகையில் ஊடகம்  முன்னிலையில் கருத்துக்களை பகிர்ந்துகொண்டமை தொடர்பில், ஊழல் ஒழிப்புப் பிரிவின் நடவடிக்கைப் பணிப்பாளராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும்  நாமல் குமாரவுக்கு எதிராக சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மாளிகாவத்தையைச் சேர்ந்த  மொஹம்மட் பழீள் மொஹம்மட் ரஸ்மின் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைவாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி  ‘ட்ருத் வித் சமுதித்த’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு  நாமல் குமார, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நபர் ஒருவர் அல்லர் எனவும் அது ஒரு கொள்கை எனவும், அல் குர் ஆனே அதனை விதைத்ததாகவும் பொருள்படும் வண்ணம் பேட்டியளித்திருந்தார்.

இதனைவிட அல் குர் ஆனை நபியவர்களே எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். அத்துடன் அந்த பேட்டியில், நாமல் குமார தான் குறிப்பிட்ட குறித்த கருத்துக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படலாம் எனவும் அதற்கு தான் அஞ்சப் போவதில்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு எதிராக  சி.சி.டியில். கொடுக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதன்படி கடந்தவாரம் முறைப்பாட்டாளர் தரப்பிடமும், நாமல் குமாரவிடமும் வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பதில் பணிப்பாளர்  உதவி பொலிஸ் அத்தியட்சர் நெவில் சில்வாவின் கீழ் இவ்விசாரணைகள் இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here