அசாதாரண காலநிலையால் 22,000 பேர் பாதிப்பு – இருவர் பலி

388
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பதினொரு மாவட்டங்களில் 5,212 குடும்பங்களைச் சேர்ந்த 21,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (டிஎம்சி) இன்று தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் ஹம்பாந்தோட்டை, காலி, திருகோணமலை, கிளிநொச்சி, களுத்துறை, கம்பஹா, கொழும்பு, புத்தளம், இரத்தினபுரி, கேகாலை மற்றும் கண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

மேலும், சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு வீடுகள் முழுமையாகவும் 117 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 64 குடும்பங்களைச் சேர்ந்த 264 பேர் பாதுகாப்பான நான்கு இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதனிடையே, களனி கங்கை, களு கங்கை, அத்தனகலு ஓய ஆகியவற்றின் நீர்மட்டங்கள் உயர்ந்தமையினால் பல பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாக நீர்பாசன மற்றும் வடிகாலமைப்பு திணைக்களம் அறிவித்துள்ளது.

அந்தந்த ஆறுகளின் மேல் மற்றும் மத்திய நீரேந்து பகுதிகளில் கணிசமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளரான பொறியியலாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்தார்.

களனி ஆற்றின் நீர் மட்டம் உயர்வதால் தெஹியோவிட்ட, ருவன்வெல்ல, சிதாவக்க, தொம்பே, ஹோமாகம, கடுவெல, பியகம, கொலன்னாவ, கொழும்பு மற்றும் வத்தளை ஆகிய தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், களு கங்கையின் நீர் மட்டம் உயர்வதால், பாலிந்த நுவர மற்றும் புலத்சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளின் தாழ்நிலப் பகுதிகளில் சிறு வெள்ளம் ஏற்படக்கூடும்.

அத்தனகலு ஓயாவின் நீர் மட்டம் உயர்வதால், திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொடை, ஜா-எல, கட்டான மற்றும் வத்தளை பிரதேச செயலகப் பிரிவின் தாழ்நிலப் பிரதேசங்களில் சிறு வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here