மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை குறித்த வழக்கு – கோட்டாவுக்கு மீண்டும் அழைப்பாணை

645

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் கடத்தப்பட்டமை தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்புமாறு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான மனுவை இன்று விசாரித்த காமினி அமரசேகர, யசந்த கோதாகொட மற்றும் ஏ. எச். எம். டி. நவாஸ் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவான் போபகே, நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததுடன் மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும் கோட்டாபய ராஜபக்ஷ சார்பாக சட்டத்தரணி எவரும் நீதிமன்றில் ஆஜராகவில்லை.

இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு மனுதாரரின் சட்டத்தரணிக்கு அறிவித்த உச்ச நீதிமன்றம், மனுவை எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி மீண்டும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் அவர்களது உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு தொடர்பில் சாட்சியமளிக்க 2019 செப்டெம்பர் 27ஆம் திகதி ஆஜராகுமாறு அப்போதைய பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபாய ராஜபக்சஷவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியது.

இதனையடுத்து, உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் யாழ்.நீதிவான் நீதிமன்றத்திற்குச் சென்று சாட்சியமளிக்க முடியாது எனவும் எனவே, யாழ்.நீதவானின் தீர்ப்பை இடைநிறுத்தி உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கோட்டபாய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

அதனை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது முடிவை அறிவித்தபோது கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்ததால் சாட்சியமளிக்க அழைக்க முடியாது என தீர்ப்பளித்தது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது எனவும் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியில் இல்லாத நிலையில், தற்போது அதற்கான உத்தரவை பிறப்பிக்க வேண்டும் எனவும் கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் உச்ச நீதிமன்றில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here