வரவுசெலவுத்திட்டத்தின் மூன்றாவது மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 08ஆம் திகதி!

284

2023ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (27) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக தெரிவித்தார்.

இதற்கமைய ஜனாதிபதியும், நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சருமான ரணில் விக்ரமசிங்க நபவம்பர் 14ஆம் திகதி பி.ப 1.30 மணிக்கு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை இரண்டாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பித்து உரையாற்றுவார்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டு மீதான விவாதம் நவம்பர் 15ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன், இதன் மீதான வாக்கெடுப்பை நவம்பர் 22ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு நடத்துவதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை மீதான விவாதம் நவம்பர் 23ஆம் திகதி ஆரம்பிக்கவிருப்பதுடன், டிசம்பர் 08ஆம் திகதி பி.ப 5.00 மணிக்கு மூன்றாவது மதிப்பீட்டுக்கான வாக்கெடுப்பை நடத்த இணங்கப்பட்டது.

இதற்கமைய நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 08ஆம்
திகதி வரையான காலப் பகுதியில் ஞாயிறு மற்றும் போயா தினங்கள் தவிர கிழமையின் ஏனைய நாட்களில் பாராளுமன்ற அமர்வு இடம்பெறும்.

வரவுசெலவுத்திட்ட விவாதம் நடைபெறும் காலப் பகுதியில் வாய்மூல விடைக்கான கேள்விகளக்காக நேரத்தை ஒதுக்காதிருக்கத் தீர்மானிக்கப்பட்டதுடன், டிசம்பர் 09ஆம் திகதி மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரையான காலப் பகுதி 50 வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்ட விவாதம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரை இடம்பெறவிருப்பதுடன், பி.ப 5.30 மணி முதல் பி.ப 6.00 மணி வரையான நேரம் சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை அல்லது சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக ஒதுக்கப்படும்.

அதேநேரம், எதிர்வரும் நவம்பர் 08ஆம் திகதி பாராளுமன்றம் கூடவிருப்பதுடன், அன்றையதினம் மு.ப 10.30 மணிக்கு தேசிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடைபெறவுள்ளது.

நவம்பர் 09ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரையான காலப் பகுதி சேர்பெறுமதி வரி சட்டத்தின் கீழான கட்டளை, மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரண்டு அறிவித்தல்கள், நிதிச் சட்டத்தின் கீழான கட்டளை, அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்,
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டளை) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி மற்றும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டளை) சட்டத்தின் கீழான இரண்டு ஒழுங்குவிதிகள் என்பன மீதான விவாதத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 10ஆம் திகதி மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 வரையான காலப் பகுதி சிறுகோரிக்கை நீதிமன்றங்களின் நடவடிக்கைமுறை (திருத்தச்) சட்டமூலம், நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம், மாகாணங்களின் மேல்நீதிமன்றம் (சிறப்பு ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், கண்டிய திருமண, மணநீக்கம் (திருத்தச்)
சட்டமூலம், நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம், குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், சிறுவர்கள் மற்றும் இளம் ஆட்கள் (திருத்தச்) சட்டமூலம், அபாயகரமான விலங்குகள் (திருத்தச்) சட்டமூலம், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழான விதிகள், 1996ஆம் ஆண்டின் இரண்டாம் இலக்க கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் சட்டத்தின் கீழான மூன்று ஒழுங்குவிதிகள் போன்றவற்றுக்கான
விவாதத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களும் மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பி.ப 5.00 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்வி மற்றும் பிரேரணைளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

நவம்பர் 11ஆம் திகதி மு.ப 9.30 மணிக்குப் பாராளுமன்றம் கூடவிருப்பதுடன் பி.ப 5.30 மணி வரை மறைந்த பாராளுமன்ற உறுப்பினர்களான  சந்திரகுமார விஜய குணவர்தன, ரி.பி.ஏகநாயக்க, கௌரவ கே.துரைரட்ணசிங்கம், பத்தேகம சுமித்திர தேரர் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here