கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்க அனுமதி மறுப்பு

672

அரசியல் கட்சிகள், தொழிற்சங்கள் மற்றும் ஏனைய அமைப்புக்கள் இணைந்து இன்று (02) ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டத்தினை கொழும்பு – கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் முன்னெடுப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதது.

மத்திய கொழும்பு – 2, பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான மேலதிக பொலிஸ் அத்தியட்சகர் கே.ஏ.ஈ.என்.டில்ருக்கினால் கடிதம் மூலம் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த கடிதத்தினை கையளிப்பதற்காக, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள தரப்பினர்களது வீடுகளுக்கும், அலுவலகங்களும் பொலிஸார் இன்று புதன் காலை சென்றிருந்தனர்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

‘ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நேரத்தில் போக்குவரத்து நெறிசல் ஏற்படும் என்பதால், அரச மற்றும் தனியார் துறைகளில் தொழில்புரிந்து வீடுகளுக்குச் செல்வோருக்கும், கோட்டை மற்றும் புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையங்களின் செயற்பாடுகளுக்கும் இடையூறு ஏற்படும்.

ஆர்ப்பாட்டத்தினால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் கட்டுநாயக்க, பியகம, வத்துபிட்டிவல மற்றும் கண்டி உள்ளிட்ட பொருளாதார வலயங்களிலிருந்து கொழும்பு துறைமுகத்திற்கு கொள்கலன்களை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்படக் கூடும் என்பதால் , அது பொருளாதாரத்திலும் தாக்கம் செலுத்தும். அத்தோடு போக்குவரத்து நெறிசல் சுற்றுலாப்பயணிகளுக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

பொலிஸ் கட்டளை சட்டத்தின் 80 ஆவது உறுப்புரைக்கமைய ஒலி பெருக்கிகளை உபயோகிப்பதற்கு பொலிஸாரின் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற போதிலும் , இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரையில் அவ்வாறு எந்த அனுமதியும் பெறப்படவில்லை.

இவற்றை மீறி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், பொது மக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோர் செயற்படும் பட்சத்தில், பொலிஸ் கட்டளை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here