கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

397

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களில் 14 பேரை எதிர் வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டதோடு,14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க மன்னார் நீதவான் இன்று (7) மதியம் உத்தரவிட்டார்.

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் சனிக்கிழமை இரவு 2 படகையும் அதில் இருந்த 15 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

இவர்கள் நேற்று (6) காலை தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதன் போது மீனவர்களில் இருவருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்ட நிலையில் தலை மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக நேற்று மாலை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஏனைய 13 இந்திய மீனவர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின் நேற்று (6) மாலை மன்னார் மாவட்ட கடற்தொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 2 மீனவர்களும் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய நிலையில் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் குறித்த 15 இந்திய மீனவர்களையும் இன்று (7) மதியம் மன்னார் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் 14 பேரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு,14 வயது சிறுவனை சிறுவர் நன்னடத்தை பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here