இரசாயன உரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால் தேயிலை விளைச்சல் வீழ்ச்சி!

404

சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்றைய(16) பாராளுமன்ற அமர்வில் எழுப்பிய கேள்வி.

உலகின் முன்னணி தேயிலை ஏற்றுமதியாளர் மற்றும் உலகின் உயர்தர தேயிலை வர்த்தக நாமம் என சர்வதேச நன்மதிப்பை பெற்றிருந்த எமது நாட்டின் தேயிலை தொழில் கிட்டத்தட்ட முற்றாக வீழ்ச்சியடைந்தமை கடந்த அரசாங்கத்தின் இயற்கை விவசாய பிரவேச வெறியின் விளைவுகளில் ஒன்றாகும்.

இரசாயன உரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதால்,தேயிலை விளைச்சல் மற்றும் அதன் தரம் வேகமாக வீழ்ச்சியடைந்தது.தேயிலைத் தொழிலின் இலாபமீட்டல் தன்மை குறைந்து வருவதால்,பெரிய அளவிலான தேயிலைத் தோட்டங்கள் படிப்படியாக தரிசு நிலங்களாக மாறி வருகின்றன.சிறு மற்றும் நடுத்தர அளவிலான தேயிலை தோட்டங்கள் மற்றும் தேயிலை தொழிற்சாலைகளின் நிலைபேறு தன்மை சரிந்துள்ளன.

வீழ்ச்சி கண்டுள்ள தேயிலை உற்பத்தி சுழற்சியை அவசரமாக மீட்டெடுப்பது அந்நிய செலாவணியை மீட்டெடுப்பதற்கான வழிமுறையாக மட்டுமல்லாமல், இந்தத் தொழிலை நம்பியுள்ள கிட்டத்தட்ட 5 இலட்சம் மக்களின் நலனுக்காகவும் இன்றியமையாது நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்றாகும்.

இதன் பிரகாரம்,இதனை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி,அரசாங்கத்திடம் இருந்து பின்வரும் கேள்விகளுக்கு குறிப்பிட்ட பதில்களையும் விளக்கங்களையும் எதிர்பார்க்கிறேன்.

01.தேயிலை பயிர்ச்செய்கையை தொடர்ச்சியாகவும் பயனுள்ளதாகவும் பராமரிக்க குறைந்தது வருடாந்தம் 5% அளவேனும் மீள் நடவு செய்ய வேண்டும். தேயிலை உற்ப்பத்திக்கு இந்நாட்டில் T65 உரம்,Zinc Sulphate, Epsom Salt மற்றும் மெட்டாசோடியம் பூச்சிக்கொல்லிகளின் தட்டுப்பாடு காரணமாக தேயிலை மீள நடுவதற்கு முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண அரசாங்கம் வழங்கும் தீர்வுகள் யாது?

02. தேயிலை தொழிலுக்கு அத்தியாவசியமான இரசாயன உரங்களான U709, T200 மற்றும் T65 ஆகியவற்றின் விலைகள் தற்போது சந்தையில் மிகவும் அதிகரித்துள்ளன. அவ்வாறே,பல்வேறு பகுதிகளில் கொள்முதல் செய்ய உரமில்லாத நிலை ஏற்ப்பட்டுள்ளது.இந்த உரத் தட்டுப்பாட்டைப் போக்கவும், நியாயமான மற்றும் மலிவு விலையில் உரங்களை வழங்கவும் அரசாங்கத்திடம் குறிப்பிட்ட வேலைத்திட்டமொன்று உள்ளதா? அவ்வாறு இருப்பின்,அது யாது?

03.தேயிலைத் தொழிலில் பயன்படுத்தப்படும் கிளைபோசேட் களைக்கொல்லியானது, மாற்று வழிகள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாமல் ஒரேயடியாக தடைசெய்யப்பட்டதால்,தரம் குறைந்த மற்றும் அதிக தீங்கு விளைவிக்கும் களைக்கொல்லிகள் விவசாயிகள் மத்தியில் பெருக வழிவகுத்தது.தரமற்ற களைக்கொல்லிகளை சந்தையில் இருந்து அகற்ற அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாது? தரத்துடன் கூடிய மாற்று களைக்கொல்லிகளை மானிய விலையில் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு வழங்க அரசாங்கத்திடமுள்ள வேலைத்திட்டம் யாது?

04. புதிய தொழில்நுட்ப அறிவு தேயிலைத் துறை சார் விவசாயிகளுக்கு போதிய அளவில் கிடைக்காமை,உயர்தொழில்நுட்ப தேயிலைச் செய்கை,தேயிலை பறிக்கும் தொழில்நுட்பம், புதிய தொழில்நுட்ப பயன்பாடுகளைப் பயன்படுத்துவதற்குத் தேவையான பிரயோக அறிவு உள்ளடங்களாக தேயிலை தொழிற்சாலைகளை பராமரித்துச் செல்வதற்கும்,முன்னேற்றத்திற்குத் தேவையான அறிவு இல்லாமை, உபகரணங்களின் பற்றாக்குறை மற்றும் குறிப்பாக தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை தேயிலை தொழில்துறையின் எதிர்கால இருப்பை நிச்சயமற்றதாக்கியுள்ளது. இந்நிலையை கையாள அரசாங்கம் தற்போதைய நிலையில் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?

05.தேயிலை பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்த முடியுமான,அதற்காக ஒதுக்கப்பட்டிருந்த,தேயிலை பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு பின்னர் கைவிடப்பட்ட பெருமளவான தரிசு நிலங்கள் மலையகம், தாழ்நில பிரதேச அதிகளவு தோட்டங்களை அன்மித்த பகுதிகளில் காணப்படுகின்றன. இந்நிலங்களை துரிதமாக சிறு தேயிலைச் செய்கைக்காக சிறு தோட்ட செய்கையாளர்களுக்கு அல்லது வேறு ஏதாவது முறையின் கீழ் பயன்படுத்துவதற்கு அரசாங்கத்திடம் குறிப்பிட்ட வேலைத்திட்டம் உள்ளதா? அவ்வாறு இருப்பின் அது யாது?

06.தேயிலை கைத்தொழிலுக்கு விதிக்கப்படும் செஸ் வரியை நம்பியுள்ள சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, இலங்கைத் தேயிலைச் சபை மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன தேயிலை கைத்தொழிலை நிலைநிறுத்துவதற்குப் போதிய வசதிகளை செய்து கொடுப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது.இந்நிறுவனங்களை விரைவான நிர்வாக மறுசீரமைப்பிற்குட்படுத்தி,
தேயிலை தொழிற்துறையின் நிர்வாகம், உற்பத்தி மற்றும் விற்பனையை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு கொண்டு வருவதற்கான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா?

07.தேயிலை தொழிலுக்காக தங்கள் வியர்வையையும் உழைப்பையும் வாரி இறைக்கும் இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் சிறு தேயிலை தோட்டக்காரர்கள் தங்கள் முதுமைக்கு பிறகு கடுமையான சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர்.
இத்தகைய வயதான தேயிலை தொழிலாளர்களை கவனித்துக்கொள்ள காப்பீட்டுத் திட்டம் அல்லது ஓய்வூதியத் திட்டமொன்றை ஸ்தாபிக்க வாய்ப்புள்ளதா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here