கொரிய வெளிவிவகார அமைச்சரின் விசேட தூதுவர் ஹன் டொங்மன் தலைமையிலான குழுவினர் சபாநாயகரைச் சந்தித்தனர்!

362
கொரிய குடியரசின் வெளிவிவகார அமைச்சின் விசேட தூதுவர் ஹன் டொங்மன் தலைமையிலான குழுவினர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (15) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
தென் கொரிய பாராளுமன்ற தேசிய சபையின் கௌரவ சபாநாயகர் பார்க் பியோங் சியொக் (Park Byeong-Seug) அவர்களின் வருகையின் போது வழங்கிய வரவேற்று மற்றும் உபசாரம் தொடர்பில் சபாநாயகருக்கு நன்றி தெரிவித்த ஹன் டொங்மன், 2023ஆம் ஆண்டு தென்கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அழைப்பு விடுத்தார்.
அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சுமுகமான கலந்துரையாடலில் பரஸ்பர நலன்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருந்ததுடன், இலத்திரனியல் கார்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கையின் நோக்கத்தை பாராளுமன்ற சபாநாயகர் வெளிப்படுத்தினார்.
புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த முறைகளை நோக்கி உலகம் செல்கின்றது என்பதை ஏற்றுக் கொண்ட ஹன் டொங்மன், எதிர்காலத்தில் இதற்கான வாய்ப்புக்கள் குறித்து இரு நாடுகளும் கவனம் செலுத்த முடியும் என்றார்.
வேலைவாய்ப்புக்காக தென்கொரியாவுக்குச் செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மற்றும் எதிர்கால முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பாரளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக கருத்துத் தெரிவிக்கையில், நிறுவனம் என்ற ரீதியில் பாராளுமன்றம் கடந்த வருடங்களில் கணிசமான முன்னேற்றங்களைச் செய்திருப்பதாகக் கூறினார்.
ஜனநாயக செயற்பாட்டில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் பாராளுமன்றத்தின் அணுகுமுறையை வெளிப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தின் வரலாற்றில் முதல் தடவையாக வரவுசெலவுத்திட்ட உரையை செவிமடுப்பதற்காக 400 பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்ததாக செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
தென்கொரிய குடியரசின் வெளிவிவகார அமைச்சின் விசேட பிரதிநிதி ஹன் டொங்மன் மற்றும் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும் இடையிலான சந்திப்பில் மேலும் பல்வேறு பரஸ்பர விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here