ஓமானில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட இலங்கை பெண்கள் : விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்!

1221

இலங்கைப் பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பாலியல் தொழிலுக்காக அமர்த்தப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவல் தொடர்பில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றில் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை தெரிவித்தார்.

அபுதாபியில் வீட்டுப்பணிப்பெண் தொழிலில் அமர்த்துவதாக தெரிவித்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இலங்கையை சேர்ந்த 12 பெண்கள் ஓமானுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஓமானுக்கு அனுப்பிவைக்கப்பட்ட குறித்த பெண்கள் அங்கு நடைபெற்ற விழாவொன்றில் பாலியல் தொழிலுக்காக பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளனர்.

தமது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, தற்போது ஏற்பட்டுள்ள பட்டினி நிலையை போக்குவதற்காக தாய்மார்கள், சகோதரிகள், ஆகியோர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பினை தேடிச்செல்கின்றனர்.

இந்த நிலையில், எமது நாட்டின் பொருளாதார நெருக்கடியினை சீர்செய்ய தன்மானத்தை அடகு வைக்க முடியாது.

இது தொடர்பில் நீதி அமைச்சர் ஏன் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன கேள்வியொன்றை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள், விதிமுறைகளையும் நியதிகளையும் மீறி செயற்படுகின்றன.

அதேபோன்றுதான் சிலரின் நடவடிக்கைகளினால் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றிருக்க ஏதுநிலை காணப்படுகின்றது.

ஆகையினால் குறித்த சம்பவம் தொடர்பில் அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வோம் என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here