follow the truth

follow the truth

July, 12, 2025
Homeஉள்நாடுசுற்றுலாத்துறையை மேம்படுத்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை

சுற்றுலாத்துறையை மேம்படுத்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை

Published on

எல்ல சுற்றுலாப் வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியன இணைந்து 4 மாதங்களுக்குள் அதற்கான திட்டத்தை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன் இன்று (16) முற்பகல் நடந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

எல்ல சுற்றுலா வலயத்தை முறையாகவும், திட்டமிட்ட வகையிலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ரம்மியமான இயற்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக எல்ல சுற்றுலா வலயம் முறையான திட்டத்துடன் அபிவிருத்தி செய்து, அதன் பின்னர் ஊவா மாகாணம் முழுவதையும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.

எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன் நடந்த கலந்துரையாடலில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

எல்ல என்பது இப்பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சுற்றுலாப் பிரதேசம். அது இப்போது இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களிக்கிறது. புதிய, பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இந்த சுற்றுலாப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கிறோம். இங்கு எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று, மாலைத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு சுமார் 500 டொலர்களை செலவிடுகிறார்கள். ஆனால் எல்ல பிரதேசத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒரு நாளைக்கு இருபது டொலர்களையே செலவிடுகின்றனர்.

இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும். சுற்றுலாத்துறையை மேம்படுத்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை. அனுபவம் வாய்ந்த சுற்றுலாத் தொழிலாளர்கள் கடந்த கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடியின் போது நாட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள்.

500 டொலர்களை செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகள், நல்ல சேவையை எதிர்பார்க்கிறார்கள். அந்த சேவையை வழங்க பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவை.

இந்த விரிவான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறந்த சுற்றுலா சேவையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஊவா மாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறைந்தது 07 நாட்களுக்கு இங்கு தங்கியிருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதன் பின்னர் எல்லவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்த புதிய அபிவிருத்தித் திட்டத்தில் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து மத்தளவிலிருந்து நேரடியாக எல்லவுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் வேலைத்திட்டம் உள்ளடக்கப்பட வேண்டும். இந்த திட்டங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகின்றன.

மேலும், சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதுடன், இந்த நாட்டில் வங்கித் துறையும் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க வேண்டும். வங்கிக் கட்டமைப்பு நிலைகுலைந்தால், சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டிற்கு வர மாட்டார்கள். எனவே, இரண்டு துறைகளையும் பாதுகாக்க வேண்டும். சுற்றுலாத் துறையையும் வங்கித் துறையையும் பாதுகாக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது. நாம் அதனை நிறைவேற்றுவோம். அதற்காக ஒத்துழைக்குமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் எல்ல வர்த்தகர்களால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு, வர்த்தகர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொஸ்கொட மற்றும் பாணந்துறை துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் – விசாரணைகள் தொடர்கின்றன.

கொஸ்கொட மற்றும் பாணந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர்...

இன்றைய வானிலை: மழையா? வெயிலா? – உங்கள் பகுதியின் வானிலை முன்னறிவிப்பு

சப்ரகமுவ மாகாணம் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இடைவிடாத மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்...

மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும் கூட்டாக செயற்பட வேண்டும்

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும்...