உணவு கொள்வனவு செய்ய சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றது தினேஷ் ஷாப்டரா?

1370

தொழில் அதிபர் தினேஸ் ஷாப்டர் கொலை செய்யப்பட்டு இன்றுடன் 7 நாட்கள் கடந்துள்ள போதிலும் அவரது கொலையுடன் தொடர்புடைய எந்தவொரு சந்தேகநபரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.

குறித்த விசாரணைகளுக்கு எந்தவித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை என காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட தினேஸ் ஷாப்டர் பொரளை பொது மயானத்திற்கு செல்வதற்கு முன்னர், அவர் சென்ற சிற்றுண்டிச்சாலை வழமையாக செல்லும் சிற்றுண்டிச்சாலை அல்ல என தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் அன்றைய தினம் குறித்த சிற்றுண்டிச்சாலைக்கு சென்றமைக்கு அவர் நன்கு அறிமுகமான வாடிக்கையாளர் இல்லை என சிற்றுண்டிச்சாலையின் ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்

இந்தநிலையில், கொழும்பு 07, ப்ஃளவர் வீதியில் உள்ள தமது வீட்டிலிருந்து பொரளை பொது மயானத்திற்கு பயணித்த தினேஸ் ஷாப்டர் மலலசேகர மாவத்தையில் உள்ள சிற்றுண்டிச்சாலை ஒன்றில் இருவருக்கு தேவையான சிற்றுண்டிகளை வாங்கிச் சென்றுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின

இதன்படி, குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தநிலையில் குறித்த உணவை கொள்வனவு செய்ய சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றது, தினேஷ் ஷாஃப்டரா? அல்லது வேறு நபரா என்பதை உறுதிப்படுத்துவதற்கு சிசிரிவி கெமராக்கள் சிற்றுண்டிச்சாலையில் பொருத்தப்பட்டிருக்காமை, விசாரணைகளுக்கு தடையாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சிற்றுண்டிகளை கொள்வனவு செய்வதற்கு வங்கி அட்டையை அவர் பயன்படுத்தினாரா என்பது தொடர்பிலும் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இதேவேளை தினேஷ் ஷாப்டரின் இரண்டு சகோதரர்களிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (22.12.2022) அவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய ஷாப்டரின் கொலைச் சம்பவம் தொடர்பில் சுமார் 60 பேரிடம் வாக்குமூலங்களைப் பெற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தினேஷ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொலைபேசி ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன.

இதன் மூலம் சந்தேகநபரை கைது செய்ய முடியும் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் கொலைப் புலனாய்வுப் பிரிவு நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here