“வாக்களிக்கும் முறையை டிஜிட்டல் மயமாக்கினால் அதிக செலவு குறையும்”

686

இந்த நாட்டில் வாக்குப்பதிவு முறையை டிஜிட்டல் மயமாக்கினால் தேர்தலுக்கு தேவைப்படும் அதிக செலவு மற்றும் பணியாளர்கள் குறையும் என இலங்கை டிஜிட்டல் பிரஜைகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனநாயகம் மற்றும் மக்கள் இறைமைக்கு மதிப்பளிக்கும் பட்சத்தில் அரசியல் இலாபம் பார்க்காமல் எதிர்கால தேர்தல் பார்வைக்காக இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும் என இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் அழைப்பாளர் அமந்த ரணசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள பத்து பில்லியன் ரூபாவில் இருந்து அச்சிடுதல், போக்குவரத்துச் செலவு, உத்தியோகத்தர் சம்பளம், உணவு மற்றும் பாதுகாப்புச் செலவுகள் என்பன மேற்கொள்ளப்படுமெனவும் அவர் கூறினார்.

தேர்தலுக்கான அச்சிடும் செலவு மாத்திரம் 4.1 பில்லியன் ரூபாவாகும் எனவும், தேர்தலை டிஜிட்டல் மயமாக்கி இலத்திரனியல் வாக்குப்பதிவு முறைக்கு மாற்றினால் இந்தத் தொகையை சேமிக்க முடியும் எனவும் அழைப்பாளர் தெரிவித்தார்.

2021 ஆம் ஆண்டு கொரோனா தொற்றுநோய் காலத்தில் தொலைதூரத்தில் பணிபுரியும் மூத்த குடிமக்கள், ஊனமுற்றோர் மற்றும் அரசாங்க ஊழியர்களுக்கு மொபைல் அடிப்படை வாக்களிக்கும் முறையை இந்தியா அறிமுகப்படுத்தியது என்று கூறிய அமந்த ரணசிங்க, இது 95 சதவீதம் வெற்றியடைந்துள்ளது என்றும் இலங்கையும் அத்தகைய முறையை நாடலாம் என்றும் கூறினார்.

மேலும், வாக்குச் சாவடிகளில் நெரிசலைக் குறைக்க இந்தியா 1989 ஆம் ஆண்டு முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துகிறது என்றும், நமீபியா மற்றும் நேபாளம் தற்போது அதைப் பயன்படுத்துவதாகவும், எஸ்டோனியா தனது தேர்தல்களை 2005 முதல் டிஜிட்டல் மயமாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here