உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் சட்ட மூலத்தில் 25 % இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க இணக்கம்

225

பாராளுமன்ற உறுப்பினர்களான பிரேம்நாத் சி. தொலவத்த மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் ஆகியோர் சமர்ப்பித்த உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தம்) தனியார் சட்டமூலங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய அமைச்சின் அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சட்டவாக்க நிலையியற் குழுவில் கருத்திற்கொள்ளப்பட்டன.

பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் சட்டவாக்க நிலையியற் குழு கூடிய போதே இந்த விடயம் தொடர்பில் கருத்திற்கொள்ளப்பட்டது.

நிலையியற் கட்டளை 53(4) இன்படி, “சட்டமூலமொன்றை சமர்ப்பிக்கின்ற கௌரவ உறுப்பினரின் மூல அபிலாசைக்கு இணங்காத ஏதேனும் வாசகத்தை சட்டமூலத்திற்கு உட்புகுத்துவதற்கு அவகாசம் வழங்கப்படுதலாகாது” என்ற ஏற்பாட்டுக்கு அமைய சட்டமூலங்களின் உள்ளடக்கம் தொடர்பில் இதன்போது கருத்திற்கொள்ளப்பட்டது.

அதற்கமைய, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் சமர்ப்பித்த (126) சட்டமூலத்தின் உள்ளடக்கமாக இருப்பது இளைஞர் பிரதிநிதித்துவம் பற்றியதாக பரிசீலனை செய்து மீண்டும் சட்டமூலமாக வரைவு செய்யுமாறு சட்டவாக்க நிலையியற் குழு சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்தும் மற்றும் சட்ட வரைஞர் திணைக்களத்திலிருந்தும் வருகை தந்திருந்த அலுவலர்களுக்கு குழு ஆலோசனை வழங்கியது.

மேலும், பிரேம்நாத் சி. தொலவத்த சமர்ப்பித்த (160) சட்டமூலத்தில் மகளிர் பிரதிநிதித்துவம் பற்றி குறிப்பிடப்பட்டிருந்த போதும், தற்பொழுது முதன்மைச் சட்டவாக்கத்தில் மகளிர் பிரதிநித்துவம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளமையினால் அது தொடர்பான பகுதியை நீக்கி 25% முழுமையாக இளைஞர் பிரதிநிதித்துவமொன்று பற்றி உள்ளடக்கப்படுதல் வேண்டும் என சட்டவாக்க நிலையியற் குழு கருதியது.

அதனால் 160ஆம் சட்டமூலத்தின் அனுசரணையாளர் உறுப்பினரின் உடன்பாட்டுடன் அச்சட்டமூலத்தையும் மீள வரைவு செய்து அறிக்கையொன்றை சபைக்கு வழங்குமாறு வருகை தந்திருந்த அலுவலர்களுக்கு குழு ஆலோசனை வழங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here