இன்று 10 அலுவலக ரயில்கள் மாத்திரம் சேவையில்

431

இன்று (15) 10 அலுவலக புகையிரதங்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

புகையிரத நிலையம் வெறிச்சோடி காணப்படுவதாகவும், அதன் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு கோட்டை புகையிரத நிலைய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, புகையிரத சேவையை தொடர்ந்தும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு நேற்று (14) இரவு அறிவித்தது.

இன்று காலை 13 அலுவலக ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அவிசாவளை, ஹலவத்தை, ரம்புக்கன, கனேவத்தை, மஹவ, கண்டி, பெலியஅத்த, காலி, அளுத்கம மற்றும் தெற்கு களுத்துறை ஆகிய இடங்களில் இருந்து கொழும்பு வரை இந்த ரயில் சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இன்று (15) 10 அலுவலக ரயில்களை மட்டுமே இயக்க முடியும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நாடு தழுவிய ரீதியில் இன்று (15) வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள வரி சீர்திருத்தம் மற்றும் ஏனைய அடக்குமுறை தீர்மானங்களுக்கு எதிராகவே இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்.

சுகாதாரம், துறைமுகம், மின்சாரம், வங்கி, நீர் வழங்கல், தபால், கல்வி உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

அனைத்து அரச வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் இன்று காலை 8.00 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இந்த பணிப்புறக்கணிப்புக்கு தாம் ஆதரவளிக்கப் போவதில்லை என அரசாங்க வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு தமது தொழிற்சங்கமும் ஆதரவளிக்கவுள்ளதாக போர்ட் ஸ்ரீலங்கா ஃப்ரீலான்ஸர் சங்கத்தின் தலைவர் பிரசன்ன களுதரகே தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கமும் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்திற்கு பெற்றோலிய ஊழியர்கள் ஆதரவு வழங்க மாட்டார்கள் என பொதுஜன முற்போக்கு ஊழியர் சங்கத்தின் பெற்றோலியக் கிளையின் தலைவர் பந்துல சமன் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ரயில் சாரதிகள் சங்கமும் ஆதரவு அளிப்பதாக ரயில்வே என்ஜின் சாரதிகள் சங்கத்தின் பிரதம தலைவர் கே. யு. கொந்தசிங்க தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த பணிப்புறக்கணிப்புக்கு தமது சங்கம் ஆதரவளிக்கவில்லை என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here