“இந்த பழைய நரைத்த கிழடுகளை விட்டு விட்டு குழந்தைகளைப் பற்றி பேசுவோம்”

1118

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஜனாதிபதிக்கு கடன் கிடைத்தமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“.. நாட்டின் குழந்தைகளைப் பற்றி சிந்திக்கிறேன், தற்போதைய பழைய நரைத்த கிழடுகளை பற்றியல்ல..

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் தொகையை பெற்றுக் கொண்டமைக்காக எதிர்க்கட்சிகளும் பாசாங்கு இல்லாமல் மகிழ்ச்சியடைய வேண்டும்..”

சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையின் நிபந்தனைகளை ஜனாதிபதி சமர்பித்ததன் பின்னர் விடுத்துள்ள அறிக்கையிலேயே குமார் வெல்கம மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“.. இந்த வெற்றிக்காக ஜனாதிபதிக்கு எனது இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன், எதிர்க்கட்சியாகிய நாமும் மகிழ்ச்சியடைய வேண்டும். இந்த முன்மொழிவை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.
ஏனென்றால் நம் நாடு வீழ்ந்துவிட்டது. நாம் எப்போதும் திருடன் திருடன் என்றுதான் சொல்வோம். பிடிக்க ஒரு திருடனும் இல்லை. இரண்டு பக்கமும் திருடர்கள் இருக்கிறார்கள். முப்பது வருடங்களாக இந்த பாராளுமன்றத்தில் இருக்கும் ஒரு மனிதனாக இதனை நான் கூறுகின்றேன். நீங்கள் சொல்லும் திருடர்கள் பிடிபட மாட்டார்கள். ஏனென்றால் பிடித்தால் எல்லோரும் பிடிபடுவார்கள். இன்னொன்றும் சொல்ல விரும்புகிறேன். இன்று அந்த திருடர்களிடம் இந்த நாட்டில் பணம் இல்லை. இந்த நேரத்தில் அரசின் திட்டத்திற்கு அனைவரும் ஆதரவளிப்போம்.

நாட்டில் பலர் சர்வதேச நாணய நிதியத்தில் பணம் பெற முடியாது என பல வாதங்கள் முன்வைக்கப்பட்டன. எதிர்க்கட்சிகளும் கொண்டு வந்தன, ஆனால் ஜனாதிபதி அந்த பணத்தை கொண்டு வந்துள்ளார். இதை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும். நாட்டைக் கட்டியெழுப்ப குழந்தைகளுக்காகப் பேசுவோம். அல்லது இந்த பழைய நரைத்த கிழடுகளுக்காகவல்ல..” எனத் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here