செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence-AI) என்பது மனிதர்களைப் போலவே சிந்திக்கவும் அவர்களின் செயல்களைப் பிரதிபலிக்கவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் மென் பொருட்களைக் குறிக்கிறது. இன்றைய நவீன தொழிநுட்ப உலகின் முக்கியமானதொரு அங்கமாக இந்த AI ஆனது காணப்படுகின்றது.
இந்த செயற்கை நுண்ணறிவு குறித்த சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவில் உலக அளவில் சவூதி அரேபியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாதம் அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட செயற்கை நுண்ணறிவு குறியீட்டு அறிக்கையின் (Artificial Intelligence Index Report 2023) ஆறாவது பதிப்பில், செயற்கை நுண்ணறிவு (AI) தயாரிப்புகள் மற்றும் சேவைகளைக் கையாள்வதில் சவூதி அரேபிய குடிமக்கள் மத்தியில் அதிக ஆர்வமும் நம்பிக்கைத் தன்மையும் வெளிப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
செயற்கை நுண்ணறிவு – AI இன் சமகால நிலைமை, வளர்ச்சி மற்றும் அதன் எதிர்காலத்தை கணிக்கவும் புரிந்துகொள்வதற்கும், கொள்கை வகுப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில் துறை வல்லுநர்களுக்கு இந்த அறிக்கை ஒரு விரிவான மூலாதாரமாக செயல்படுகிறது.
சமகாலத்தில் மற்றும் எதிர்காலத்தில் நடைமுறையில் பாவனைக்கு வரும் செயற்கை நுண்ணறிவு தயாரிப்புகள் மற்றும் சேவைகள் குடிமக்களால் ஆர்வத்துடனும் பல விதங்களில் வினைதிறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்தப்படும் என்ற எதிர்பார்க்கையில் சீனாவிற்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் சவூதி அரேபியா இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஒசாகாவில் நடைபெற்ற G20 மாநாட்டிலே “நாம் அறிவியல் வளர்ச்சிகள், முன்கண்டிராத பாரிய தொழிநுட்ப கண்டுபிடிப்புகள் மற்றும் வரம்புகள் இல்லாத வளர்ச்சிகளை கண்டு கொண்டிருக்கின்ற காலத்தில் வாழ்கிறோம். செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற அதி நவீன நொழிநுட்பங்களை வினைத்திறனாகவும் பயன்தரும் முறையிலும் பயன்படுத்துவதன் மூலம் பல தீங்குகளை தவிர்த்து எதிர்கால உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடலாம்” என சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான இளவரசர் முஹம்மத் பின் சல்மான் அவர்கள் கூறினார்கள். இளவரசரின் அன்றைய சொற்பொழிவு சவூதி தலைமையின் தொழிநுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு தொடர்பான ஆர்வத்தை பிரதிபலித்தது மட்டுமல்லாமல் இன்று இராச்சியத்துக்குள் மக்கள் சிறப்பாக அவற்றை பயன்படுத்தி நடைமுறைப் படுத்தவும் வழிவகுத்திருக்கின்றது.
எழுத்து- காலித் ரிஸ்வான்