வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்க புதிய ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டம் – தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தெரிவிப்பு
நாட்டில் தற்பொழுது நடைமுறையில் உள்ள தொழிலாளர் சட்டத்தில் காணப்படும் சிக்கல் நிறைந்த தன்மையைப் போக்குவதற்குப் புதிய ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தைத் தயாரிப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் அமைச்சர் மனுஷ நாணயகார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த ஒருங்கிணைந்த தொழிலாளர் சட்டத்தைத் தயாரிப்பதற்குப் பொதுமக்கள் உள்ளிட்ட சகல தரப்பினரினதும் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை மே 02ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
குறிப்பாக தொழில்முயற்சிகளை ஆரம்பிப்பதற்காக இலங்கைக்கு வரும் முதலீட்டாளர்கள் வியாபார செயற்பாடுகளை ஆரம்பிப்பதை இலகுபடுத்துவது மற்றும் அவற்றை நடத்திச் செல்லும் நடைமுறைகளை இலகுபடுத்துவதற்கு இந்தப் புதிய சட்டம் உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேநேரம், ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவுசெய்யப்படாமல் உள்ள வணிகங்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. நாட்டில் இதுவரை 80 ஆயிரம் வியாபார நிறுவனங்கள் மாத்திரமே ஊழியர் சேமலாப நிதியத்தில் புதிவு செய்திருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பதிவுசெய்யப்படாத நிறுவனங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும் எனப் பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதற்கமைய நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள வணிகங்கள் குறித்த தகவல்களை தொழில் அமைச்சுக்கு அனுப்பிவைக்குமாறு சகல பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர்களுக்கு எழுத்துமூலம் அறிவிக்கவும் குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் முன்னெடுக்க எதிர்பார்த்துள்ள வேலைத்திட்டமொன்றை ஒரு மாத காலத்துக்குள் சமர்ப்பிக்குமாறு தொழில் திணைக்களத்துக்கும், ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
வெளிநாட்டுப் பணியாளர்களை அனுப்பும் விடயத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவிதமான கோட்டாக்களும் வழங்கப்படவில்லையென்றும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் குறித்து மக்களைத் தெளிவுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுக்குமாறும் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
அண்மைய காலப் பகுதியில் 90,000 பேரை வேலைவாய்ப்புக்களுக்காக வெளிநாடுகளுக்கு அனுப்பிவைத்திருப்பதாகவும், இதில் 26,000 பேர் குறைந்த உழைப்புக்காகவும், 60,000ற்கும் அதிகமானவர்கள் திறமையான தொழில்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் குழு முன்னிலையில் தெரிவித்தார்.
ரொமேனியா நாட்டில் உள்ள இலங்கையர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அந்நாட்டில் இலங்கைத் தூதரகமொன்றை அமைப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் யதாமினி குணவர்தன நன்றி தெரிவித்தார்