குற்றம் ஒன்று தண்டனைகள் வெவ்வேறு

2658

கடந்த 3ம் திகதியன்று, இலங்கை சுங்கத்தின் இரத்தினக்கல் மற்றும் ஆபரண மதிப்பீட்டுப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழு எட்டு கோடி ஐம்பத்து மூவாயிரத்து தொள்ளாயிரம் பெறுமதியான 04 கிலோ 611 கிராம் எடையுள்ள தங்கத்தை சட்டவிரோதமான முறையில் கொண்டு வர முயன்ற பிரான்ஸ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டதாக சுங்கப் பணிப்பாளர் பதில் சுங்க ஊடகப் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்தார்.

35 வயதுடைய இந்த பிரான்ஸ் நாட்டவர் இதற்கு முன்னரும் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், இம்முறை 24 மணித்தியாலங்களுக்கு மட்டுமே இலங்கையில் இருப்பார் என்பதனை கருத்தில் கொண்டு சுங்க அதிகாரிகளால் இந்த தங்கத்தை கண்டுபிடித்து கைது செய்ய முடிந்ததாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அவர் கடந்த 3ம் திகதி காலை 06.45 மணியளவில் பிரான்சின் பாரிஸில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-501 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அவரது லக்கேஜில் இருந்த பல தங்க நெக்லஸ்கள், முதல் பார்வையில் கண்டுபிடிக்க முடியாத வகையில் கருப்பு பெயின்ட் பூசப்பட்ட தங்கக் கட்டிகள் போன்றவற்றை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்து கைது செய்தனர்.

சம்பிரதாயமான சுங்க விசாரணையை சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் எஸ்.சிவஞானம் மேற்கொண்டார், அங்கு தங்கப் பதுக்கல் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பிரான்ஸ் நாட்டவருக்கு 7 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த பிரான்ஸ் நாட்டவர் தண்டப்பணத்தை செலுத்த தவறிய நிலையில், சுங்க அதிகாரிகளால் நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க டி சில்வாவிடம் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். அங்கு இந்த பிரான்ஸ் பிரஜையை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த மே மாதம் 23ம் திகதி அன்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் 08 கோடி ரூபா பெறுமதியான தங்கத்தை சட்டவிரோதமாக கொண்டு வந்த போது, ​​அதில் 10% அதாவது 75 இலட்சம் ரூபாயை அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்ட சுங்க அதிகாரிகள் , இம்முறை சட்டவிரோதமாக சம மதிப்புள்ள தங்கத்தை கையிருப்பு கொண்டு வந்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு 07 கோடி ரூபாய் அபராதம், அதாவது கொண்டு வந்த பொருட்களின் மதிப்புக்கு சமமாக 100% அபராதம் விதிப்பது குறித்து சமூகத்தில் பரவலான விவாதமாக எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here