ஜனாதிபதியின் கலந்துரையாடலை புறக்கணித்த பொஹட்டுவ உறுப்பினர்கள்

1050

ஜனாதிபதி தலைமையில் கடந்த 12ம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கலந்து கொள்வதில்லை என தீர்மானித்ததால் பாரிய அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

இந்த சந்திப்பிற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்களை ஜனாதிபதி அழைத்திருந்தார்.

அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடும் நோக்கில் இந்த கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் பலன்களை எவ்வாறு மக்களுக்கு கொண்டு சேர்ப்பது, தொலைத்தொடர்பு போன்ற நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு தற்போதுள்ள எதிர்ப்பிற்கு எதிராக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், எப்படி என்பது குறித்து விரிவாக கலந்துரையாடுவதே இந்த கலந்துரையாடலின் நோக்கம் என ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், நாமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ரோஹித அபேகுணவர்தன, சனத் நிஷாந்த, எஸ்.எம்.சந்திரசேன மற்றும் பொதுஜன பெரமுன தலைவர்கள் உட்பட மாவட்ட தலைவர்கள் எவரும் இந்த நிகழ்வில் ஈடுபடவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் இதற்கு முன்னர் நான்கு தடவைகள் பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்குமாறு விடுத்த கோரிக்கையை புறக்கணித்தமையே இந்த சந்திப்பை புறக்கணிப்பதற்கான பிரதான காரணம் என ஒரு தரப்பு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட இந்த சந்திப்பு தொடர்பில், பொதுஜன பெரமுன, ஜனாதிபதி விரும்பினால், அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் போன்றவர்களை அழைக்கலாம் என முன்னர் தெரிவித்திருந்தது.

அத்தகைய அழைப்பை ஏற்பாடு செய்ததற்கு கட்சி வருத்தமும் தெரிவித்திருந்தது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்களை ஜனாதிபதி அலுவலகத்தின் ஊடாக கூட்டத்திற்கு அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதுவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, கட்சியின் மாவட்டத் தலைவர்களை இந்த நிகழ்வில் ஈடுபடுத்த வேண்டாம் என கட்சி தீர்மானித்துள்ளதாகவும் கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here