பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி அகற்றப்பட்டதா?

420

பேராதனை போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதிக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி குழு தற்காலிகமாக பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் பொய்யானது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில், குறித்த தடுப்பூசி வகையை பாவனையிலிருந்து தற்காலிகமாக நீக்குவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தார்.

கண்டி பொத்தபிட்டிய அலகல்ல பிரதேசத்தில் வசித்து வந்த 21 வயதுடைய யுவதி வயிற்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர். அங்கு இரண்டு ஊசிகள் போடப்பட்டதால் அவர் இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனியார் செய்திச் சேவையொன்றுக்கு தெரிவிக்கையில், யுவதிக்கு வழங்கப்பட்ட அதே தடுப்பூசியை பெற்றுக்கொண்ட 12 நோயாளிகள் அதே வார்டில் நலமுடன் இருப்பதாக தெரிவித்தார். தானும் அந்த வைத்தியசாலைக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடியதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார். அதன்படி குறித்த யுவதி ஒவ்வாமை காரணமாக உயிரிழந்திருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், யுவதியின் மரணம் தொடர்பில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அதற்காக 05 விசேட வைத்தியர்களைக் கொண்ட குழுவொன்று அண்மையில் நியமிக்கப்பட்டது. அந்த குழுவின் உறுப்பினர்களும் இன்று பேராதனை போதனா வைத்தியசாலைக்கு சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here