ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல், சதித்திட்டம், உதவி மற்றும் உடந்தையாக இருந்தமை தொடர்பில் நௌபர் மௌலவி உட்பட 24 பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை கொழும்பு மேல் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.
தமித் தோட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் 24 பிரதிவாதிகளுக்கு எதிராக 23270 குற்றச்சாட்டுகளை சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.
ஐந்து நாட்களாக இடம்பெற்று வந்த குற்றச்சாட்டுக்கள் மீதான வாசிப்பு நேற்று (11) நிறைவடைந்ததையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்றைய தினம் சாட்சியமளிக்க நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பி. அம்பாவிலவுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியதாக எமது நீதிமன்ற செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
21 ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குலுக்கு சதி செய்தமை , உதவி செய்தல் உள்ளிட்ட 23270 குற்றச்சாட்டுகளின் கீழ் நௌபர் மௌலவி, சஜீத் மௌலவி, முகமது மில்ஹான், சாதிக் அப்துல்லா, ஆதம் லெப்பே, அலியஸ் கெளபர் மாமா, முகமது சனாஸ் தீன், மொஹமட் ரிஸ்வான் உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.