இலங்கை – கியூபா இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வு

197

இலங்கை – கியூபா இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்வு இலங்கை மற்றும் கியூபா இரு நாடுகளுக்கிடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறித்து அண்மையில் (09) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இலங்கை – கியூபா பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.

நட்புறவுச்சங்கத்தின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது இலங்கைக்கான கியூபா தூதுவர்
அண்ட்ரஸ் மார்செலோ கரிடோவும் (Andres Marcelo Garrido) கலந்துகொண்டார்.

இலங்கை மற்றும் கியூபா என்பன நீண்ட காலமாக எல்லா சந்தர்ப்பங்களிலும் ஒருவருக்கொருவர் ஆதரவளித்து சர்வதேச ரீதியில் நட்பு நாடக இருந்து வருவதுடன் இந்தப் போக்கு அதிகரிக்கப்பட வேண்டும் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண இதன்போது குறிப்பிட்டார். அத்துடன், இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் இலங்கை – கியூபா நட்புறவு அமைப்புகளை ஆரம்பிப்பதன்
மூலம் கியூபா பற்றி இலங்கை மக்கள் அறிந்துகொள்ள வாய்ப்பாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதற்கமைய, தமது பகுதிகளில் இலங்கை – கியூபா நட்புறவு அமைப்புகளை
ஆரம்பிப்பதற்கு முன்வருமாறு பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கைக்கான கியூபா தூதுவர் அண்ட்ரஸ் மார்செலோ கரிடோ குறிப்பிடுகையில், கியூபா பாராளுமன்றத்தில் அண்மையில் கியூபா – இலங்கை பாராளுமன்ற நட்புறவுச்சங்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அங்கத்தவர்கள் இரு நாடுகளுக்குமிடையில் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆர்வமாக உள்ளதாகத் தெரிவித்தார்.

அத்துடன், கியூபா முகங்கொடுத்த பல்வேறு சவால்களின் போது இலங்கை வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றிகளைத் தெரிவித்தார். அதேபோன்று இரு நாடுகளுக்குமிடையில் விளையாட்டு மற்றும் வர்த்தகம் போன்ற
துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் நவம்பர் மாத ஆரம்பத்தில் நடைபெறவுள்ள ஹவானா சர்வதேச சந்தையில் இலங்கை வர்தகர்களையும் கலந்துகொள்ளுமாறு கியூபா தூதுவர் அழைப்பு விடுத்தார்.

இங்கு உரையாற்றிய இராஜங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் குறிப்பிடுகையில், கியூபா அரசுடன் இணைந்து இலங்கையில் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்ததுடன், இதற்கான எனக்கருப்பத்திரம் ஏற்கனவே
தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை நட்புறவுச்சங்கத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் நட்புறவுச்சங்கத்தின் உப தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வீரசுமன வீரசிங்க, நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களான கௌரவ ஜயந்த வீரசிங்க மற்றும் இசுறு தொடங்கொட ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here