சுற்றுலா விசா ஊடாக வெளிநாடு செல்வோர் கவனத்திற்கு

8824

இலங்கையில் இருந்து சுற்றுலா விசாக்களை பயன்படுத்தி சட்டவிரோதமாக குடியேறுவதை தடுக்கும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் “பாதுகாப்பான இடம்பெயர்வு ஊக்குவிப்பு பிரிவை” தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (ஆகஸ்ட் 21) திறந்து வைத்தார்.

அண்மைக்காலமாக ஓமான், மலேசியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா விசாவின் கீழ் அதிகளவானோர் வேலைக்காகச் சென்றுள்ளதாகவும், இதனால் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றைத் தடுக்கவே இந்த புதிய பிரிவு நிறுவப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரச பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் மனித கடத்தலுக்கு எதிரான தேசிய செயலணியின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த புதிய பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

இதற்காக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், குடிவரவுத் திணைக்களம், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளின் பங்களிப்பும் பெறப்பட்டுள்ளது. மூன்று மாத முன்னோடித் திட்டமாக இயங்கி வரும் இந்த அலகின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்த பின்னர், இங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய மேலும் மேம்பாட்டு முன்மொழிவுகளும் செயல்படுத்தப்பட உள்ளன.

இந்நிகழ்வில், விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி, விமான நிலைய முகாமைத்துவப் பிரிவின் தலைவர் எச். ஹெட்டியாராச்சி, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் ஹில்மி அஸீஷ், பணியகத்தின் பொது முகாமையாளர் பிரியந்த சேனாநாயக்க உட்பட இலங்கை பொலிஸ், குற்றப் புலனாய்வுத் திணைக்களம், குடிவரவுத் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here