கண்டி கும்பல் பெரஹரவில் யானைகள் குழம்பியமை தொடர்பில் அறிக்கை கோரல்

427

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெற்ற இரண்டாவது கும்பல் பெரஹெரவின் போது பல யானைகள் குழம்பியமை தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது ஊர்வலங்களில் யானைகள் குழம்புவது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.

இந்நிலையில், கண்டியில் இடம்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க எசல அணிவகுப்பில் யானைகள் அமைதியின்றி குழம்பியமைக்கு சிறுவன் ஒருவனால் ஊதப்பட்ட ஊதுகுழல்தான் காரணம் என யானையை பராமரித்த யானைப் பாகன் தெரிவித்துள்ளார்.

பெல்மதுல்ல விகாரையின் யானையான ரத்னா தான் இவ்வாறு குழம்பிய முதல் யானை, அந்த யானையை பராமரிக்கும் அசோக சந்திரசேகர இது தொடர்பில் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

“… எனது யானை கதிர்காமம் கோவிலின் கலசத்தின் காவலராகப் பயணித்தது. அப்படியே நடந்து அரண்மனையின் படிகளில் ஏறி அணிவகுப்புப் பாதையில் வந்துகொண்டிருந்தபோது இரும்பு வேலியின் ஓரத்தில் இருந்த ஒரு சிறுவன் யானையின் தும்பிக்கையை நெருங்கி சத்தமாக ஊதுகுழலில் ஊதியது. அப்போது யானை பயந்து ஓட ஆரம்பித்தது. நான் 25 வருடங்களாக யானைப் பாதுகாவலராக இருந்து வருகிறேன், இந்த யானை அப்படித் தொந்தரவு செய்யும் ஒன்றல்ல.

யானை ஊதுகுழல் சத்தத்திற்கு பயந்து நிற்காமல் ஓட ஆரம்பித்தது. பின்னர் யானையை கட்டுப்படுத்தி ஒருபுறம் கட்டினார்கள். இந்த சம்பவத்தில் எங்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. யானைகள் ஊதுகுழல் சத்தம் போன்றவற்றால் மிகவும் கிளர்ச்சியடைகின்றன. சிலர் யானைகளின் கண்களை லேசர் டோச் ஆல் தாக்குகின்றனர். இதுபோன்ற செயல்களைச் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்…”

ஊர்வலத்தில் பயணிக்கும் யானைகளுக்கு தீங்கு விளைவிக்கும் செயற்பாடுகளில் இருந்து விலகிக்கொள்ளுமாறு தலதா மாளிகையில் உள்ள யானைகளுக்கு பொறுப்பான பிரதீப் மியானபலவ கேட்டுக்கொண்டார். இரண்டாவது கும்பல் பெரஹரில் நடந்த சம்பவம் ஒன்றும் பெரிய சம்பவம் இல்லை என்றும் இதில் எந்தவொரு யானையும், எந்தவொரு நபரும் தாக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

பெரஹராவின் போது பீதியுடன் நடந்துகொண்ட யானைகளை சில நாட்கள் ஓய்வெடுக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த பிரதீப் மியானபலவ , அதுவரை பெரஹரவிற்கு ஏனைய யானைகள் பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here