“தங்கள் கைகளில் இரத்தக்கறை இல்லை என்றால், உண்மையை வெளிப்படுத்த அஞ்ச வேண்டாம்”

861

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மை குறித்து நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும், பாரபட்சமின்றி நடுநிலையான விசாரணையின் மூலம் மேதகு கர்தினால் தலைமையிலான கத்தோலிக்க சமூகத்திற்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு பின்னர் ஊடகங்களுக்கு இன்று (9) கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன் பிரதான சூத்திரதாரியாக இருப்பவர்கள் யார்? இதை திட்டமிட்டது யார்? இதற்கு யார் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார்?இது தீவிரவாத திட்டமா? இதில் அரசியல் நோக்கங்கள் இருந்ததா என்பதும் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், உண்மையை வெளிப்படுத்துவதில் தயங்கக் கூடாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கருத்து வெளியிடும் போது;

நியாயமான விசாரணை கோரப்படும் போது அலற வேண்டிய அவசியமில்லை என்றும், அரசாங்க தரப்பு நபர்கள் இவ்வாறு கூச்சல் போடுவதால் இதில் மறைப்பதற்கு ஏதோ இருக்கிறதா என்ற சந்தேகம் எழுவதாகவும், கைகள் சுத்தமாக இருந்தால்,அந்த கைகளில் இரத்தக்கறை படியவில்லை என்றால், அரசியல் பேரங்களுக்காக பயங்கரவாதிகளுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்றால்,உண்மையைத் தேட அச்சப்பட வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

திருட்டு,மோசடி,பொய்,மனித கொலை ஆகியவற்றுடன் 113 பேர் நின்றதாகவும், 74 பேர் மக்களை வாழ வைக்கும் பக்கம் நின்றார்கள் என்றும்,தரம் தாழ்ந்த மருந்துகளை கொண்டு வந்து மக்களை கொல்ல நினைப்பவர் பக்கம் 113 பேர் நின்றதாகவும்,மக்களை வாழ வைக்க நினைக்கும் 74 பேரின் புகைப்படங்களை தனித்தனியாக ஊடகங்கள் மூலம் வெளியிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here