“பென்னு..” 200 கோடி கிமீ தொலைவில் இருந்தாலும் கச்சிதமாக தட்டி தூக்கிய நாசா – 150 ஆண்டுகளில் பூமியில் மோதுமாம்

961

உலகில் விண்வெளி ஆராய்ச்சியில் முன்னோடியாக திகழும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா அடுத்த பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் உள்ள பென்னு என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரியை சேகரித்து வெற்றிகரமாக பூமிக்கு கொண்டு வந்துள்ளது.

பென்னு என்பது பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் இருக்கும் சிறு கோளாகும். அது சூரிய மண்டலத்தில் உள்ள மலையளவு பெரிய விண்வெளிப் பாறையாகும். அது சுமார் 500 மீட்டர் அதாவது 1,640 அடி அகலம் கொண்டது.

“இந்த பென்னு சிறுகோள் பூமியின் தோற்றத்திற்கு முன்பே உருவானது. ஏன் நமது சூரிய குடும்பத்திற்கு முன்பே கூட உருவானதாகக் கூட இருக்கலாம்’ என விண்வெளி ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளரான தாந்தே லாரெட்டா (Dante Lauretta) தெரிவித்திருந்தார்.

ஆகவே அதனை ஆய்வு செய்வதன் மூலம் பூமியின் தோற்றம், பூமியில் உயிர்களின் தோற்றம் பற்றிய ரகசியங்களை அறிந்து கொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

பென்னு சிறுகோளில் இருந்து கற்களையும் மண்ணையும் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி 2016-ம் ஆண்டு தொடங்கியது. அந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலத்தை பென்னு சிறுகோளை நோக்கி நாசா செலுத்தியது. பூமியில் இருந்து 200 கோடி கி.மீ. தொலைவில் உள்ள அந்த சிறுகோளை அந்த விண்கலம் நெருங்க 2 ஆண்டுகளாயின.

பென்னு சிறுகோளில் எந்த இடத்தில் மண் மாதிரிகளை சேகரிப்பது என்பதை தீர்மானிக்க மேலும் 2 ஆண்டுகளை நாசா எடுத்துக் கொண்டது. இந்த காலத்தில் பென்னு சிறுகோளின் அமைப்பை விண்கலத்தின் மூலமாக ஒவ்வொரு அங்குலமாக நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அதன் முடிவில், பென்னு சிறுகோளில் எந்த இடத்தில் மண் மாதிரிகளை சேகரிப்பது என்று அவர்கள் தீர்மானித்தனர்.

2020-ஆம் ஆண்டு, அக்டோபர் 20-ஆம் திகதி பென்னு சிறுகோளில் ‘மண்’ மாதிரி எடுக்கப்பட்ட தருணம் அற்புதமான ஒன்றாக இருந்தது.

ஒசைரிஸ்-ரெக்ஸ், பென்னுவின் தரை வரை தாழ்வாகச் சென்றது. பிறகு, அதன் 3 மீட்டர் (10 அடி) நீளமான ‘கரத்தால்’ மண்ணை அள்ளி எடுக்கும் பொறிமுறையைப் பிடித்துக் கொண்டது.

பென்னுவின் மேற்பரப்பைத் தாக்கி, அதே நேரத்தில், கற்கள் மற்றும் மண்ணை மேலெழ வைக்க நைட்ரஜன் வாயுவை வெடிக்கச் செய்வதே திட்டமாக இருந்தது.

ஆனால், அடுத்து நடந்தது அதிர்ச்சியளிப்பதாக இருந்தது.

விண்கலத்தின் பொறிமுறை பென்னுவைத் தொடர்பு கொண்டபோது, அதன் மேற்பரப்பு ஒரு திரவம் போலப் பிரிந்தது.

நைட்ரஜன் வாயு செலுத்தப்பட்ட போது, பொறியின் வட்டு 10செ.மீ கீழே இருந்தது. நைட்ரஜனின் அழுத்தம் 8 மீ (26 அடி) விட்டம் கொண்ட ஒரு பள்ளத்தை உருவாக்கியது. கல்லும் மண்ணும் எல்லா திசைகளிலும் பறந்தன. ஆனால் முக்கியமாக சேகரிப்புப் பொறிமுறையின் கொள்கலனுக்குள்ளும் சென்றன.

பென்னு சிறுகோளில் மண் மாதிரிகளை வெற்றிகரமாக சேகரித்த பின்னர் ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பூமியை நோக்கிய பயணத்தை தொடங்கியது.

ஒசைரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பூமியை நெருங்கியவுடன், தம்மிடம் இருந்த சிறுகோளின் மண் மாதிரிகள் அடங்கிய கொள்கலனை பூமியை நோக்கி விடுவித்தது. அந்த கொள்கலன் விநாடிக்கு 12 கி.மீ. அதாவது மணிக்கு சுமார் 43,500 கி.மீ. வேகத்தில் பூமியை நோக்கி விரைந்தது.

துப்பாக்கித் தோட்டாவை விட 15 மடங்கு வேகத்தில் சீறி வந்ததால் வானத்தில் ஒரு தீப்பிழம்பைப் போல கொள்கலன் காட்சியளித்தது. அதில் பொருத்தப்பட்டிருந்த வெப்பக்கவசம் அதனை அந்த நெருப்பில் இருந்து காப்பாற்றியது. அதில் பொருத்தப்பட்டிருந்த பாராசூட் அதனை வேகத்தை தணித்து மெதுவாக தரையை நோக்கி பயணிக்க உதவியது.

பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்த 13 நிமிடங்களில் அந்த கொள்கலன் பத்திரமாக தரையைத் தொட்டது. ஒசைரிஸ் – ரெக்ஸ் விண்கலத்தால் விடுவிக்கப்பட்ட, பென்னு சிறுகோளின் 250 கிராம் மண் மாதிரிகளை சுமந்து கொண்டிருந்த கொள்கலன் திட்டமிட்டபடி அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தில் உள்ள பாலைவனத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இலங்கை நேரப்படி காலை 8.12 மணிக்கு இந்த அற்புத தருணம் நடந்தேறியது. இதையடுத்து நாசா விஞ்ஞானிகள் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

தரையைத் தொடுமுன் கொள்கலனில் இருந்து தனியே விடுவித்துக் கொண்ட பாராசூட்டும் அருகிலேயே விழுந்தது. அங்கே தயாராக காத்திருந்த நிபுணர்கள் அந்த கொள்கலனை ஆய்வு செய்தனர். பின்னர், அந்த கொள்கலன் உட்டாவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

அதன் பிறகு, அங்கே நாசா ஏற்கனவே தயாராக நிறுத்திவைத்துள்ள ஹெலிகாப்டர் மூலம் ஜான்சன் விண்வெளி மையத்திற்கு அந்த கொள்கலன் கொண்டு செல்லப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here