தானிய இறக்குமதிக்காக அரசாங்கம் செலவழிக்கும் அந்நியச் செலாவணியைச் சேமிக்கும் நோக்கத்தில், கிராமியப் பிரதேசங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு, தானிய வகைகளைப் பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தை மையமாக வைத்து வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டத்தை, எதிர்காலத்தில் நாடு பூராகவும் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (05) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்,
கிராமிய பிரதேசங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு அவசியமான விதைகளை வழங்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். குறிப்பாக உழுந்து, பயறு ஆகிய தானிய வகைகளை பயிரிடுவதற்கு அவசியமான விதைகளை வழங்குவதுடன் அவற்றுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.
இதன் மூலம் இம்முறை மன்னார் மாவட்டத்தில் சுமார் 950 மெட்ரிக் தொன் பயறு விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. இதன் ஊடாக பயறு இறக்குமதிக்கு நாம் செலவிடும் அந்நியச் செலாவணியை சேமிக்க முடிந்துள்ளது. இவ்வேலைத்திட்டத்தை நாட்டில் பரவலாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஆடு வளர்ப்புக்கு அவசியமான உதவிகளையும் நாம் வழங்கியுள்ளோம். முக்கியமாக காப்புறுதி வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் ஆடுகளை வழங்கி வைப்பதனால் ஆடு வளர்ப்பின்போது ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் முடிந்துள்ளது.
சிறிய அளவில் கிராமிய மட்டத்தில் ஆடுகள் வளர்ப்பவர்களை சுமார் 03 அல்லது 04 ஆண்டுகளில் ஆட்டுப் பண்ணையாளர்களாக மாற்றுவதற்கு அவசியமான வேலைத்திட்டங்களை இதன் மூலம் முன்னெடுக்க முடியும்.
கடந்த காலங்களில் ஏற்பட்ட குறைபாடுகளைத் தவிர்த்து கிராமிய மக்களுக்கு அவசியமான விடயங்களை அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான மிகச்சரியான தீர்மானங்களையும் திட்டங்களையும் நடைமுறைத்த தேவையான வேலைத்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம்.
அதேபோன்று பொருளாதார மத்திய நிலையங்களை உருவாக்கவும், ஏற்கனவே நிர்மாணப் பணிகள் நிறைவடைந்து இதுவரை மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை மிக விரைவில் திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம்.
விவசாய நடடிக்கைகளுக்கு நீரைப் பெற்றுக்கொள்ளும் கிராமிய பிரதேசங்களில் உள்ள குளங்கள், கால்வாய்களை புனர்நிர்மாணம் செய்வதற்கும் தேவையான நிதி ஒதுக்கீடுகளையும் ஜனாதிபதி வழங்கி வைத்துள்ளதுடன், தற்போது நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மிக்க சூழ்நிலையிலும் கூட ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதிகளை மீளப்பெறாமல் விவசாயிகளைப் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கு அவசியமான திட்டங்களை முன்னெடுக்க ஜனாதிபதி வழங்கும் ஆதரவையும் இங்கு நன்றியுடன் நினைவுகூர்கின்றேன் என்றும் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.