பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் அரசாங்கப் பத்திரிக்கைகளில் வெளியாகியுள்ள பொய்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றத்தை தெளிவுபடுத்தினார்.
டிசம்பர் 17 தினமின பத்திரிகையில் ‘அரசியலமைப்பு பேரவை நீக்கிய பொலிஸ் மா அதிபரை ஜனாதிபதி நியமித்தார். நீக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் சேவையில் நியமிக்கப்பட்டார். இந்த திடீர் நீக்கம் போதைப்பொருள் வியாபாரி ஒருவரை பாதுகாப்பதற்காகவா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளது என்றவாறு அரச பத்திரிகையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோன்ற செய்தி டெய்லி நியூஸ் பத்திரிகையிலும் பிரசுரமாகியுள்ளதாகவும், இந்த இரண்டு பத்திரிகைகளும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் கீழே உள்ளதாகவும், குறித்த இரு நிறுவனங்களுக்கும் நிறைவேற்று அதிகாரம் கூட பொறுப்பேற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பொலிஸ் மா அதிபர் நியமனம் இரண்டு தடவைகள் நீடிக்கப்பட்ட போதிலும், இந்த செய்தி அறிக்கைகளின் பிரகாரம், பிரதமர் தலைமையில் சபாநாயகர், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட நிமல் சிறிபால டி சில்வா, மொட்டுக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், எதிர்க்கட்சித் தலைவர், கௌரவ கபீர் ஹாசிம் மற்றும் 3 சிவில் சமூக பிரதிநிதிகளைக் கொண்ட அரசியலமைப்பு பேரவையானது, 3 ஆவது தடவையாக பொலிஸ் மா அதிபரை நியமிக்காது விட்டது போதைப்பொருள் அரசனை பாதுகாக்கவே என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் தான் இந்தச் செய்தியை நிராகரிப்பதாகவும், தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் போதைப்பொருள் வியாபாரிகளை பாதுகாப்பதில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (20) பாராளுமன்றத்தில் தினமின பத்திரிகையில் வெளியான செய்தி தொடர்பிலான சிறப்புரிமைக் கேள்வியை எழுப்பியே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்களுக்கு சுயாதீன நீதித்துறை மூலம் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற கொள்கையில் தான் இருப்பதால், இந்த இரண்டு பத்திரிகை ஆசிரியர்களையும் வரவழைத்து,”அரசியலமைப்பு பேரவை பாதுகாக்கும் போதைப்பொருள் வியாபாரிகள் யார்”என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும், யாருடைய செல்லப்பிராணிகளையும் பாதுகாக்கவோ அல்லது போதைப்பொருள் பிரபுக்களைப் பாதுகாக்கவோ அல்லது உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பொறுப்பானவர்களைப் பாதுகாக்கவோ இந்த அரசியலமைப்பு பேரவை எந்த சூழ்நிலையிலும் தயாராக இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சரியான நியமனத்தை வழங்க வேண்டிய பொறுப்பு ஜனாதிபதிக்கு உள்ளதாகவும், பிரேரிக்கப்படும் பெயர்களுக்கு ஆம், இல்லை கூறுவதற்கு இது ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அல்ல என்பதால், இது அரசியலமைப்பு பேரவைக்கு ஏற்படுத்திய கலங்கம் என்றும், இந்த இரண்டு பத்திரிகை ஆசிரியர்களும் சிறப்புரிமைக் குழுவிற்கு அழைக்கப்படவில்லை என்றால் இதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.