நாட்டில் நடப்பது விலை அதிகரிப்பும் விற்பனையும்தான்

153

ஸ்மார்ட் நாட்டை உருவாக்கி வருவதாக கூறி, நாட்டின் சட்டத்தையும், அமைச்சரவை தீர்மானங்களையும் மீறி மின்கட்டணத்தை அதிகரிக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் ஸ்மார்ட் நாடொன்று உருவாகாது என்றும், இதன் காரணமாக பாடசாலை செல்லும் பிள்ளைகளின் போசாக்கு பற்றாக்குறையினால் அவர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் உணவை வழங்குவதில் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர் எனவும், இது பிள்ளைகளின் மூளை வளர்ச்சியை பலவீனப்படுத்துவதாகவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.

ஓராண்டில் முறைகேடாக 3 தடவை மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கட்டணங்களை அதிகரித்து விட்டு, குறித்த விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் பெரும் வீராப்பு பேசி வருகிறார் என்றும், எவ்வளவு தான் நீர் மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டாலும் 3 மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டண திருத்தத்தை மேற்கொள்வதாக கூறுவதை அனுமதிக்க முடியாது என்றும், இது ஸ்மார்ட் நாட்டுக்கான பண்பல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி கூறும் ஸ்மார்ட் நாட்டில் விலை அதிகரிப்பும் விற்பனையுமே காணப்படுவதாகவும், பில்லியன் கணக்கில் இலாபம் ஈட்டும் லிட்ரோ கேஸ் நிறுவனத்தைக் கூட விற்பதற்கு அரசாங்கம் தயாராகி வருவதாகவும், இதனால் ஊழியர்களின் பாதுகாப்பு கூட பறிபோயுள்ளதாகவும், நாட்டில் நடப்பது விலை அதிகரிப்பும் விற்பனையும்தான் என்றும், இது வரம்பற்ற அசௌகரியத்தையும் அழுத்தத்தையும் தோற்றுவித்துள்ளதாகவும், இதனால் நாட்டின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களுக்கே மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

75 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தற்போதைய எதிர்க்கட்சி மக்களுக்கு சேவை செய்து வருவதாகவும், தானும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் ஒரு பொது ஊழியர் என்றும், நாட்டின் தற்காலிக பதவி நிலை பொறுப்பை மட்டுமே தானும் தற்சமயம் ஆற்றிவருவதாகவும், மக்களுக்கு சேவை செய்வதில் தான் எப்போதும் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் இலங்கையை உருவாக்கும் பயணத்தை வலுப்படுத்தும் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் 37 ஆவது ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் இன்று (24) வட கொழும்பு டி லா சால் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தலைவர்களுக்கு மக்கள் மீதான உணர்திறன் இல்லை என்றும், நாட்டு மக்கள் அழுத்தத்திற்கு உள்ளாகும் போது, நாட்டின் ஜனாதிபதி மேலும் மேலும் விலைகளை அதிகரித்தும் சொத்துக்களை விற்பனை செய்தும் நாட்டு மக்களை கொன்று குவித்து வருகிறார் என்றும், பொருளாதாரச் சுருக்கத்திற்கு அப்பால் சனத்தொகையைக் குறைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் புத்திஜீவிகள் வெளியேற்றம் ஏற்பட்டுள்ள இவ்வேளையில், நாட்டிற்குத் தேவை துன்பங்களைத் தீர்க்கும் தலைமைத்துவமே என்றும், இதற்குத் தேவையான அனைத்து வழிகாட்டல்களையும் வழங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here