2023 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் துடுப்பாட்டத்தின் போது ஸ்டம்புக்கு வர மிகவும் தாமதமாகிவிட்டதால் ‘Time Out’ அறிவிப்புடன் Run out வீரராக அறிவிக்கப்பட்டு துரதிஷ்டவசமாக வெளியேறினார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஏஞ்சலோ மேத்யூஸ்;
“.. பங்களாதேஷ் அணி விளையாடிய விதமானது மிகவும் கீழ்த்தரமானது. நடந்த நிகழ்வு மிகவும் வேதனைக்குரியது. நான் கிரீசிற்கு 2 நிமிடங்களுக்குள்ளேயே சென்று விட்டேன். கிரீசில் தான் என்னுடைய ஹெல்மட் உடைந்தது. தெளிவாக அதனை நடுவர் கூட ஏற்றுக் கொண்டார். ஹெல்மட் உடைந்த பின்னரும் எனக்கு 5 வினாடிகள் இருந்தன. நான் மைதானத்திலிருந்தே ஹெல்மட் இனை காட்டி சைகை செய்தேன். அதற்குப்பின் நடுவர் கூறினார் இவ்வாறு மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதென்று..
என்னிடம் வீடியோ சாட்சி கூட உள்ளது. இப்போது நடுவர்கள் கூறுகிறார்கள் திரும்ப மீளாய்வு செய்திருக்கலாம் என்று.. இப்போது கூறி என்னதான் பிரயோசனம். என்னுடைய இந்த 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படி ஒன்று நடந்ததை என்னால் விவரிக்க முடியாது. இதுகால வரைக்கும் நான் இவ்வாறு கீழ்த்தரமான தீர்மானத்தினை எடுக்கும் ஒரு அணியினை சந்தித்ததில்லை. ஷஹீப் மற்றும் பங்களாதேஷ் அணியானது உண்மையிலேயே இவ்வளவு மோசமாக நடந்து கொள்வார்கள் என நினைக்கவில்லை.
எம்மை மதிப்பவரை நாமும் மதிக்க வேண்டும். அதை விட்டு அவர்களை மதிக்கவில்லை என்று பொருள்படாது. இங்கு பொதுவான அறிவு கூட இல்லாது மதிப்பளிக்களிக்கத் தெரியாதோர் எதை வைத்து மரியாதையினை எதிர்பார்க்கிறார்கள்?
இதுவரைக்கும் நான் ஷகீப் உள்ளிட்ட பங்களாதேஷ் அணிக்கு மிகவும் மரியாதையளித்து நடத்தினேன். போட்டி விதிமுறைக்கு உட்பட்டு தோற்றால் அது சரி, அப்படி இல்லாது எனக்கு செய்தது தவறு. நான் ஆதாரத்துடன் கதைக்கிறேன். யாரென்றாலும் பாதுகாப்பு முக்கியம். ஹெல்மட் இல்லாது விளையாட முடியாது.
நடுவர்கள் என்னை அவமதிக்கவில்லை, அவர்களுக்கு மீள்பரிசீலனை செய்ய வாய்ப்பிருந்தது. பங்களாதேஷ் செய்தது போன்று வேறு எந்தவொரு அணியும் நடந்து கொண்டிருக்காது என நான் நினைக்கிறேன். நான் சரியான நேரத்திற்கு சென்றேன், ஷகீப் தவறான முடிவை எடுத்தார். எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், வேறு எனப்த அணியும் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொள்ளாது..”