இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு ஐசிசியிடம் கோரிக்கை

1737

உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று(10) இடைநிறுத்தியது.

இலங்கை கிரிக்கெட்டின் செயல்பாடு, சுதந்திரம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் அரசின் தலையீடு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான விடயங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் மேலும் பரிசீலிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சபையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கட் பேரவையின் பணிப்பாளர் சபை இலங்கையில் கிரிக்கெட் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்றை இணையத்தளத்தின் ஊடாக நடத்தியதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பேரவையின் சிறப்புக் கூட்டம் நவம்பர் 18-21 திகதிகளில் இந்தியாவின் அகமதாபாத்தில் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள பணிப்பாளர் சபைக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் தொடர்பில் எடுக்கப்படவுள்ள ஏனைய தீர்மானங்கள் குறித்து ஆராயப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த கிரிக்கெட் தடை விதிக்கப்பட்டதாக Cricinfo இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது, இந்தியா சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் ஷம்மி சில்வா இந்த தீர்மானத்தை எடுப்பதற்கான குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக Cricinfo இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், அஹமதாபாத்தில் நடைபெறவுள்ள ஐசிசி கூட்டத்திலும் அவர் பங்கேற்க உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2014-2015 காலப்பகுதியில் இடைக்கால கிரிக்கெட் குழு ஒன்று இலங்கையில் செயற்பட்ட போது, ​​அது சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக Cricinfo இணையத்தளம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

2023 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக போட்டிகளில் தோல்வியடைந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் தலைவர் அர்ஜுன ரணதுங்க தலைமையில் இடைக்கால கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க நடவடிக்கை எடுத்திருந்தார்.

எனினும் அதற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் நடவடிக்கை எடுத்த போது, ​​இடைக்கால நிர்வாக சபையை 14 நாட்களுக்கு இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

பின்னர் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் காரசாரமான விவாதம் இடம்பெற்றதுடன் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகள் சபையை நீக்குவது தொடர்பிலும் விவாதம் நடத்தப்பட்டு கூட்டுத் திட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, எதிர்வரும் 14ஆம் திகதி கோப் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கட் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்துவதற்கு சர்வதேச கிரிக்கட் பேரவை நடவடிக்கை எடுத்துள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here