கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் இலங்கை அணியின் வீரர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று(14) கோப் குழுவில் வெளிப்படுத்தினார்.
கோப் குழு முன்னிலையில் இலங்கை கிரிக்கெட் சபை அழைக்கப்பட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் பேசிய தயாசிறி ஜயசேகர, வைத்தியரால் போடப்பட்ட ஊசிகளினால் வீரர்களின் பாதங்களில் பல்வேறு கோளாறுகள் தோன்றியுள்ளதாக குறிப்பிட்டார்.
அந்த மருத்துவர் தொழில்முறை விளையாட்டு மருத்துவர் அல்ல என்பதையும் அவர் வெளிப்படுத்தினார்.
‘வன் ஷாட்’ என்ற புனைப்பெயர் கொண்ட வைத்தியர் வலிநிவாரணி மருந்துகளை வழங்கி வீரர்களுக்கு நீண்டகால நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 150,000 ரூபா சம்பளத்திற்கு சேவை வழங்குமாறு கோரி அப்போதைய பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோனுக்கு கடிதம் அனுப்பப்பட்டமை தொடர்பில் தேசிய மக்கள் படையின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க கிரிக்கெட் நிறுவனத்திடம் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கோரிக்கையை பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் நிராகரித்ததாக கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் உரையாற்றிய அநுர குமார திஸாநாயக்க, கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கடிதம் அனுப்பி இவ்வாறான கோரிக்கையை முன்வைப்பது மிகவும் பிழையான செயலாகும்.
அங்கு நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, கிரிக்கெட் நிறுவனத்திற்கு கிடைக்கும் பணத்தில் வீரர்களுக்கு எவ்வளவு பணம் வழங்கப்படுகிறது என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த கிரிக்கெட் அமைப்பு, அனைத்து வீரர்களுக்கும் 25 சதவீத ஊதியம் வழங்குவதாக தெரிவித்துள்ளது.
பாடசாலை விளையாட்டுக்கள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் வீரர்கள் உட்பட 60 வீதமான தொகையானது விளையாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் எனவும் கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.