நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையம் நாட்டுக்கே சவாலாக மாறியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று (21) தெரிவித்தார்.
இந்த மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையானது அதன் எதிர்கால நன்மைகள் மற்றும் எதிர்கால வகிபாகங்களை மீள் மதிப்பீடு செய்ய தூண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் ஆரம்பமான 2023 இலங்கை பசுமை ஹைட்ரஜன் மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
ஜப்பானின் உதவியுடன் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய திட்டத்திற்கு ஆதரவாக நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய திட்டத்தை இரத்து செய்ய பிரதமர் என்ற ரீதியில் தான் எடுத்த தீர்மானம் காரணமாக கடும் எதிர்ப்பை சந்திக்க நேரிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காற்றாலை போன்ற நிலையான ஆற்றல் மூலங்களைப் புறக்கணிப்பது தொடர்பில் தாம் மகிழ்ச்சியடையவில்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஆற்றல் முகாமைத்துவத்தில் காணப்படும் பலவீனங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
அதன்படி, நீண்ட கால மின் உற்பத்தித் திட்டம் குறித்து விரிவான பார்வை மற்றும் மறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கும் நவீன பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவதே இலங்கையின் நோக்கமாகும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
பரந்த பார்வையுடன் எரிசக்தி திட்டங்கள் தொடர்பில் முடிவெடுப்பதற்கு வழிகாட்டுவதற்கு ஆற்றல் மாற்றச் சட்டம் மற்றும் பல பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபையானது சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் முகவர் நிறுவனத்துடன் இணைந்து “Greenstat” Green Energy கம்பனியுடன் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இலங்கையின் தேசிய ஹைட்ரஜன் வீதி வரைபடத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தார்.
இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் Greenstat Hydrogen India கம்பனி ஆகியவற்றின் கூட்டு முயற்சியின் விளைவாக இந்த வரைபடமானது இலங்கையின் எரிசக்திக்கு வழி வகுக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் ஏஜென்சியின் ஆதரவுடன் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.