பாராளுமன்ற சிறப்புரிமை குழு இன்று முதல் கூடுகிறது

234

பாராளுமன்ற ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழு இன்று (27) முதல் குழுவின் தலைவர் சமல் ராஜபக்ஷ தலைமையில் மூன்று நாட்களுக்கு கூடவுள்ளது.

ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படும் 09 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 6 மனுக்களை ஆராய சிறப்புரிமைக் குழு இன்றும் (27) நாளையும் (28) நாளை மறுதினமும் (29) கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இது தொடர்பான முறைப்பாடுகளை இந்த வாரம் முன்னுரிமை வழங்கி விசாரிக்குமாறு ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய் பெரேராவுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம், நாடாளுமன்ற உதவிச் செயலாளர் நாயகத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி விடுத்த அச்சுறுத்தல், இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்னவிற்கு எதிரான முறைப்பாடு, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவால், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடு என்பன விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார ஆகியோருக்கு எதிரான முறைப்பாடு மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிரான முறைப்பாடு இங்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த முறைப்பாடுகளை அவசரமாக விசாரித்து வரவு செலவுத் திட்டத்தை இறுதி செய்வதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here