கொழும்பு பெருநகரம் தொடர்பான திண்மக் கழிவு முகாமைத்துவத் திட்டம் அரச மற்றும் தனியார் பங்களிப்புடன் அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் நிலையான செயற்பாட்டிற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை தற்போது அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை நிறைவு செய்வதற்காக இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் 5500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
புத்தளம், அருவக்காலு பகுதியில் உள்ள கைவிடப்பட்ட குழிகளுடன் சுகாதார கழிவுகளை அகற்றும் வசதி மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பு ஆகியவற்றை நிர்மாணிக்க நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. களனி மற்றும் புத்தளத்தில் 02 கழிவுப் பரிமாற்ற நிலையங்களை நிர்மாணிப்பதும் அது தொடர்பான புகையிரத உட்கட்டமைப்பு மற்றும் வீதி அமைப்பும் இதன் கீழ் நிர்மாணிக்கப்படும்.
கொழும்பு பெருநகரத்தைச் சுற்றி சேகரிக்கப்படும் 1200 மெற்றிக் தொன் குப்பைகளை களனி குப்பை பரிமாற்ற நிலையத்திற்கு கொண்டு வருவதற்கு முதலில் திட்டமிடப்பட்டது, அது சுருக்கப்பட்டு கொள்கலன் பெட்டிகளில் அடைக்கப்பட்டு, புகையிரதத்தில் கொண்டு செல்லப்பட்டு அருவக்காலுவில் சுகாதாரமான முறையில் அகற்றப்பட்டது. ஆனால் தற்போது மேல்மாகாணத்தில் உள்ளூராட்சி மன்றங்களால் அகற்றப்படும் எஞ்சிய கழிவுகள் அனைத்தும் சுகாதாரமான முறையில் அகற்றப்படும் வகையில் இந்த வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன.
இலங்கை புகையிரத திணைக்களம் களனியிலிருந்து அருவக்காலுக்கு குப்பைகளை கொண்டு செல்வதற்கு தேவையான 17 புகையிரத வண்டிகளை சரிசெய்து வழங்குவதற்கு 549.06 மில்லியன் ரூபா மதிப்பீட்டை சமர்ப்பித்துள்ளது. அந்த தொகையை வழங்க அமைச்சரவையின் அனுமதி பெறப்பட உள்ளது.