இந்தியாவில் இருந்து 30 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், சதொச நிறுவனத்திற்காக தினமும் இரண்டு மில்லியன் முட்டைகள் வெளியிடப்படுவதாகவும் இலங்கை அரச வர்த்தக சட்ட கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்தார்.
பண்டிகைக் காலத்துக்கான கேக் உற்பத்திக்காக பெரிய அளவிலான பேக்கரி உரிமையாளர்கள் அதிக அளவில் முட்டைகளை வாங்குவதால் இருப்புத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உற்பத்தியாளர்கள் முட்டையை மறைத்து, முட்டை விலையை உயர்த்தி நுகர்வோரை அசௌகரியப்படுத்தினால், அடுத்த ஆண்டும் முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக, சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த வாரம் முதல் 42-45 ரூபாவாக இருந்த முட்டையின் விலையை 60-65,70 ரூபா வரை வியாபாரிகள் உயர்த்தியுள்ளனர்.
இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 6-7 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகளை சதொச ஊடாக 35 ரூபாவிற்கு கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
அதிகளவில் முட்டைகளை குவித்து வைத்திருப்பவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதன்காரணமாக அடுத்த வாரத்திற்குள் முட்டையின் விலை குறைவடையும் எனவும், அதிக விலைக்கு முட்டைகளை சேகரிப்பது தேவையற்றது என நுகர்வோருக்கு அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.