கண்பார்வை சிரமத்தினை எதிர் கொண்டுள்ள சகீப் அல் ஹசன்

444

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சகலதுறைவீரரான சகீப் அல் ஹசன் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் போது கண்பார்வை சிரமத்தினை (Blurred Vision) எதிர் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணிக்காக சகலதுறைகளிலும் அசத்தியிருந்த சகீப் அல் ஹசன், இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருக்கவில்லை. 2023ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரில் 7 போட்டிகளில் ஆடிய அவர் 26.57 என்கிற துடுப்பாட்ட சராசரியோடு 186 ஓட்டங்களை மாத்திரமே குவித்திருந்தார்.

இவ்வாறு சகீப் அல் ஹசன் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய சந்தர்ப்பம் ஒன்றிலேயே அவர் அழுத்தங்கள் காரணமாக நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் கண்பார்வை சிரமத்தினை எதிர்கொண்டதாக Cricbuzz செய்தி இணையத்திடம் குறிப்பிட்டிருக்கின்றார்.

இந்த விடயம் தொடர்பில் வெளியிடப்பட்ட மேலதிக தகவல்களுக்கு அமைய சகீப் அல் ஹசனிற்கு அவரது இடது கண்ணில் பார்வை சிரமம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சகீப் அல் ஹசன் உலகக் கிண்ணத்தில் ஓரிரு போட்டிகள் அல்லாது முழுவதுமாக பார்வைப் பிரச்சினையினால் பாதிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு அது அவரின் துடுப்பாட்டத்திலும் தாக்கம் செலுத்தியதாக கூறப்படுகின்றது. இதுவே இந்த உலகக் கிண்ணத் தொடரில் அவரது துடுப்பாட்டம் மோசமாக அமைய காரணமாகியிருக்கின்றது.

தற்போது அரசியலில் குதித்துள்ள 36 வயது நிரம்பிய சகீப் அல் ஹசன், பங்களாதேஷின் 12ஆவது பாராளமன்ற தேர்தலில் போட்டியிடவிருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சகீப் அல் ஹசனின் பங்களாதேஷ் அணியானது இம்முறை ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரில் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறி இருந்ததோடு அவ்வணி இரண்டு வெற்றிகளை (இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக) மாத்திரமே பதிவு செய்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here