அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்களில் 50% ஆனோருக்கு வீட்டுரிமைப் பத்திரங்கள்

272

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களில் 50 வீதமானவர்களுக்கு இவ்வருட இறுதிக்குள் வீட்டுரிமைப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் தெரிவித்துள்ளார்.

தற்போது நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்புகளில் 14542 பேர் வசித்து வருகின்றனர்.

அதன்படி, முதற்கட்டமாக 50 சதவீதம் பேருக்கு வீட்டுரிமைப் பத்திரம் வழங்கப்படும். மற்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் பிற சிக்கல்களைத் தீர்க்க சிறிது காலம் எடுக்கும் என்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை கூறுகிறது.

அந்த பிரச்சினைகளை தீர்த்து அடுத்த வருடம் ஏனைய குழுவிற்கு உரிமைப்பத்திரங்களை வழங்குமாறு, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தமக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மேலும் குறிப்பிட்டார்.

குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தை செயல்படுத்தும் முக்கிய நிறுவனங்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஆகியனவாகும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த கொள்கைப் பிரகடனத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கான உரிமைப் பத்திரங்களை வழங்குவது துரிதப்படுத்தப்படும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இவ்வருடம் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் பத்தரமுல்லை செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகாரசபை கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (5) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வருடத்திற்கு 22 அபிவிருத்தி திட்டங்களை வர்த்தமானியில் வெளியிடுமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பணிப்புரை விடுத்துள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அபிவிருத்தித் திட்டங்கள் வர்த்தமானியில் வெளியிடப்படுவதற்கு முன்னர் அதில் மொழிப் பிரயோகம் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் தலைவர் தெரிவித்தார்.

இதேவேளை, அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த முதல் உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டத்தின் வீட்டு அலகுகளின் முதல் உரிமையாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு அனுமதி கோரி அமைச்சரவையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

பொரளை, ஓவல் வியூ ரெசிடென்சீஸ் வீடமைப்புத் திட்டம் என்பது, அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக நகர அபிவிருத்தி அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடமைப்புத் திட்டமாகும், மேலும் இது நவீன வசதிகளுடன் கூடிய 24 மாடிகளைக் கொண்டுள்ளது.

இந்த வீட்டு வளாகத்தில் 608 வீட்டுத் தொகுதிகள் மற்றும் 5 வர்த்தக தொகுதிகள் உள்ளன.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here